

சென்னை
சென்னையில் கொரட்டூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளை நேற்று பார்வையிட்ட தலைமைச் செயலர் கே.சண்முகம், ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் கொள்ளளவை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை கண்காணிக்க வேண்டும் என்றுமுதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சி ஆணையரிடம் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதா என்பது குறித்து தலைமைச் செயலர் சண்முகம் நேற்று ஆய்வு செய்தார். முதலில் கொரட்டூர் ஏரிக்குச் சென்று, ஏரியின் நீர் இருப்பு மற்றும் வரத்துக் கால்வாய், உபரி நீர் வெளியேறும் பகுதி ஆகியவற்றைப் பார்வையிட்டார். அப்போது பல கால்வாய்கள் வழியாக கழிவுநீர் அதிக அளவில்ஏரியில் கலப்பதைக் கண்ட அவர், அங்கிருந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் இந்திராவிடம், ‘‘ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றுகண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, ரெட்டேரி, பேசின் பிரிட்ஜ், கூவம் ஆறு கரைப்பகுதி, வேளச்சேரி ஏரி உள்ளிட்ட பகுதிகளையும் ஆய்வுசெய்து, தூர்வாரும் பணிகளைதுரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தலைமைச் செயலருடன் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.