Published : 26 Oct 2019 07:46 AM
Last Updated : 26 Oct 2019 07:46 AM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா அக்.28-ல் தொடக்கம்: நவம்பர் 2-ல் நடைபெறும் சூரசம்ஹாரத்துக்கு ஏற்பாடுகள் தீவிரம்

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (அக்.28) தொடங் குகிறது. நவம்பர் 2-ம் தேதி சூரம்சம்ஹாரம் நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா வருகிற 28-ம் தேதி தொடங்குகிறது.

அன்று அதிகாலை 1.30 மணிக்குவிஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 5.30மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருள, 6.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி சண்முகவிலாசம் சேர, அங்கு தீபாராதனை நடைபெறும்.

மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரமாகி, தங்க ரதத்தில் உலா வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும். 5-ம் நாள் திருவிழாவான நவம்பர் 1-ம் தேதி வரை இந்நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும்.

கடற்கரையில் சூரசம்ஹாரம்

நவம்பர் 2-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரைக்கு எழுந்தருள்வார். அங்கு சூரசம்ஹாரம் நடைபெறும்.

பின்னர், சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன் சுவாமிக்கு சாயா அபிஷேகம் முடிவுற்ற பிறகு, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் வழங்கப்படும்.

திருக்கல்யாணம்

நவ.3-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு செல்வார். மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும்.

ஏற்பாடுகள் தீவிரம்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக திருச்செந்தூரில் 9 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கோயில் கிரி பிரகாரத்தில் இரும்பு தூண்கள் மற்றும் தகர சீட்டுகளால் ஆன தற்காலிக கூரைஅமைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித், தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x