

மதுரை
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் ஜாதி மோதலில் ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உட்பட 9 பேரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த ஆண்டு மே 28-ல் நடைபெற்ற ஜாதி மோதலில் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பழையனூர் போலீஸார் சுமந்த், அருண், சந்திரகுமார், மீனாட்சி, இளையராஜா உள்ளிட்ட 16 பேர் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைதான கருப்பு ராஜா என்ற முனியாண்டிசாமி, இளையராஜா, கனீத் என்ற கனீத்குமார், அக்னி என்ற அக்னிராஜ், ஒட்டகுலத்தான் என்ற கந்தசாமி, மாயசாமி, ராமகிருஷ்ணன், கருப்பையா, செல்வி உள்ளிட்ட 9 பேர் ஜாமீன் கேட்டு சிவகங்கை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 31.10.2018-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை ரத்து செய்து 9 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பார்தீபன் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், "சாதி உள்நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குற்றச் சம்பவத்தில் மனுதாரர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தொடர்பை வைத்து முடிவெடுக்க முடியாது. ஒட்டுமொத்த குற்றத்தை கருத்தில் கொண்டு மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.