புகழேந்தி: கோப்புப்படம்
புகழேந்தி: கோப்புப்படம்

வாழ்த்து தெரிவிக்க வந்தேன்; தினகரன் விஸ்வாசம் இல்லாதவர்: முதல்வரை சந்தித்த பின் அமமுகவின் புகழேந்தி பேட்டி

Published on

சேலம்

இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க சந்தித்ததாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அமமுகவை சேர்ந்த புகழேந்தி இன்று (அக்.25) சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி "இடைத்தேர்தல் வெற்றிக்காக முதல்வர் பழனிசாமியை இதயத்தில் இருந்து வாழ்த்த வேண்டும் என எனக்கு ஆசை இருந்தது. அதிமுக இமாலய வெற்றியை பெற்றிருக்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதியில் நான், மறைந்த ஜெயலலிதாவுக்கு பொறுப்பாளராக பணியாற்றினேன். மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்தோம். ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பாரோ அதே வெற்றியை அதிமுக இப்போது பெற்றிருக்கிறது.

இப்போது நான் அதிமுகவில் சேர வரவில்லை. நெஞ்சார வாழ்த்த வந்தேன். இந்த வெற்றி சிறக்க வேண்டும், தொடர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. அரசியல் பேசவே இல்லை.

சசிகலா சிறைக்கு செல்லும்போது இரண்டு பணிகளை கொடுத்துச் சென்றார். ஒன்று, துணை பொதுச் செயலாளர் பொறுப்பை ஒருவரிடம் கொடுத்தார். அவர் பெயரை சொல்ல கூட நான் விரும்பவில்லை. எனக்கு நேரமில்லை. என்னை பற்றிய கேள்விகளுக்கு அவர் என் நேரத்தை வீணாக்காதீர்கள் என்கிறார். சந்திராயனில் ஏதோ ஆராய்ச்சி செய்வது போல் பேசுகிறார்.

இரண்டாவது, அவர் ஒப்படைத்த ஆட்சி, முதல்வர் பழனிசாமி தலைமையில் எந்தவித குந்தகமும் இல்லாமல் வீறுநடை போடுகிறது. அதனை அவர் தக்க வைத்துக்கொண்டார்," என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

உங்கள் சந்திப்பை அதிமுக - அமமுக இணைப்புக்கான முயற்சியாக பார்க்கலாமா?

யாரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதனை இணைப்பு என கருதக்கூடாது. அதிமுகவில் இணைவதாக இருந்தால் முன்கூட்டியே தெரிவிப்பேன்.

எடப்பாடி பழனிசாமி 35 ஆண்டுகளாக எங்களின் நண்பர். நன்றாக பழகினோம். தினகரனை நம்பி கொடி பிடித்தோம். அத்தனை கொடுமைகளையும் சந்தித்தோம். இப்போது அனைத்தையும் இழந்து நிற்கிறோம். இருந்தாலும் எங்களுக்கு என தன்மானம் இருக்கிறது. சரியான நேரத்தில் முடிவு செய்வோம்.

நீங்கள் இப்போது அதிமுகவா, அமமுகவா?

நான் அமமுகவில் தான் இருக்கிறேன்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், அமமுகவுக்கு செல்வாரா?

இணையமாட்டார். அதிமுக ஆட்சியை முதல்வர் தக்க வைத்துள்ளார். அதைத்தான் சசிகலா விரும்புவாரே தவிர, அமமுகவை விரும்ப மாட்டார். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னர் அமமுகவும் தினகரனும் இருக்க மாட்டார்கள். இந்த நாட்டிலேயே விஸ்வாசம் அற்றவர் தினகரன்.

அமமுக யாருடைய கட்சி?

அமமுக என்னுடைய கட்சி. போகப் போக வேடிக்கையை பாருங்கள்.

இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in