Published : 25 Oct 2019 02:28 PM
Last Updated : 25 Oct 2019 02:28 PM

ஆரோக்கியமான தீபாவளியை முன்னெடுக்கும் திருப்பூர் சமூக ஆர்வலர்கள்!

பழக்கொத்து

திருப்பூர்

தீபாவளிக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்பவர்களுக்கு மத்தியில், திருப்பூரில் கடந்த பல ஆண்டுகளாக பழங்களையும், பழக்கொத்துகளையும் வழங்கி ஆரோக்கியத்துக்கான முன்னெடுப்புடன் கொண்டாடி வருகிறார்கள் திருப்பூரை சேர்ந்த மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும்!

தீபாவளி பண்டிகையை ஆரோக்கியத்துக்கான முன்னெடுப்பாக மடைமாற்றி கொண்டாடிவரும், இந்திய பொது மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவரும், திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான மருத்துவர் ஆ.முருகநாதன், "எந்தப் பண்டிகையாக இருந்தாலும் முதலிடம் வகிப்பவை இனிப்புகள்.

ஆனால் அதில் ஒளிந்துள்ள அபாயங்களை நம்மில் பலர் அறிவதில்லை. பண்டிகைக் காலங்களில் சாப்பிடும் இனிப்புகளில் உள்ள கலோரி அளவுகளையும், அவற்றால் ஏற்படும் உடல் பருமன் போன்ற உடல்நலப் பாதிப்புகள் மிக ஏராளம். எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொடர்ந்து இனிப்புகளைச் சாப்பிடுவது, உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

மைதா மாவு, நெய், வெண்ணெய், வனஸ்பதி, எண்ணெய், சர்க்கரை, பால், பால்கோவா, கன்டன்ஸ்டு மில்க் ஆகியவையே இனிப்பில் கலோரி அதிகரிக்கக் காரணங்களாகும். வீட்டில் எண்ணெய் பதார்த்தங்கள், டால்டாவினால் செய்த சிற்றுண்டிகள், இனிப்பு வகைகள் போன்றவைகளை தவிர்த்து விட்டு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆரோக்கியமான உணவுவகைகளை கொடுப்பது சிறந்தது.

இனிப்பு காரங்களுக்கு பதிலாக பழங்கள், பாதம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் மற்றும் உலர் பழங்கள் போன்ற உணவுகளை கொடுத்து ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட வழி செய்வோம்.

மருத்துவர் ஆ.முருகநாதன்

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிகமாக எண்ணெய்களை பயன்படுத்தி இருப்போம். தயவு செய்து அந்த எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தும்போது, அதாவது அந்த எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி அதில் சமைத்த உணவை உட்கொள்வதால் அதில் டிரான்ஸ்ஃபேட் என்னும் கொழுப்பு அதிகமாக உருவாகிறது. இதனால் உடல் பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் பல நோய்கள் உருவாவதற்கு காரணமாகிறது.

ஆகவே உடலின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு, திருப்பூரில் கடந்த பல ஆண்டுகளாக பழங்களையும், பழக்கொத்துகளையும் வழங்கி ஆரோக்கியத்துக்கான முன்னெடுப்புடன் கொண்டாடி வருகிறோம்,” என்றார்.

பழக்கொத்து

திருப்பூரில் பல ஆண்டுகாலமாக தீபாவளி பண்டிகைக்கு, பழங்கள் மற்றும் பழங்கொத்துகளை வழங்கிவரும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

"தீபாவளிக் கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியமான பகுதி பட்டாசு வெடிப்பது, மத்தாப்பு கொளுத்துவது, ராக்கெட் உள்ளிட்ட வண்ணமயமான பல வெடிபொருட்களை நாம் கொளுத்தி மகிழ்வது. ஆனால் இந்தப் புகையினால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். பட்டாசு வெடித்தவுடன் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபட்டால் குழந்தைகளின் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதற்கு காரணம் சிறிய அளவிலான மாசுபாட்டை கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மனிதர்களுக்கு 12 வயதில்தான் நுரையீரல் முழு வளர்ச்சி அடைகிறது. அதனால், பல்வேறு வேதிக் கலவையுடன் கூடிய பட்டாசு புகையை குழந்தைகளின் நுரையீரலால் சமாளிக்க முடியாது.

காற்று மாசுபாடு:

நாடு முழுவதும் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் காற்று மாசுபாடு காரணமாக மட்டும் 12.5 விழுக்காட்டினர் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் பெண் குழந்தைகள்தான் அதிகம். 10000 பெண் குழந்தைகளில் அசுத்தமான காற்றால் இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கை 9.6 விழுக்காடாக உள்ளது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் சொல்லும் நேரங்களில் மட்டும் பட்டாசுகளை வெடித்து காற்று மாசுபாட்டை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

காற்று மாசு அடையும் காரணத்தால் சுவாசக் கோளாறு மற்றும் இதய நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகமாக கூடும். இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு காது கேளாமை கோளாறு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு காரணம் நம் நாட்டில் உள்ள வாகன இரைச்சல், நீண்ட நேரம் அதிக சத்தத்துடன் டி.வி.பார்ப்பது, இசை கேட்பது போன்றவற்றை சொல்லலாம். தீபாவளி சமயங்களில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கும்போது காது கேளாமை கோளாறு மேலும் அதிகமாகும். எனவே குறைந்த ஒலியை எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதே காதுகளுக்கு நல்லது," என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x