காமராஜர் நகரை தனது தொகுதியாக்குகிறார் நாராயணசாமி?

காமராஜர் நகர் தொகுதியில் வென்ற ஜான்குமாருடன் முதல்வர் நாராயணசாமி
காமராஜர் நகர் தொகுதியில் வென்ற ஜான்குமாருடன் முதல்வர் நாராயணசாமி
Updated on
1 min read

புதுச்சேரி

காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் வென்றாலும் வரும் காலத்தில் இத்தொகுதியை தனக்கான தொகுதியாக்க முதல்வர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார். அதற்காக நிகழ்த்திய அரசியல் கணக்கிலும் வென்றுள்ளார். இதையொட்டி திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடனும் செலுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயம் முதல்வராவார் என பலரும் எதிர்பார்த்தனர். திடீர் திருப்பமாக பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவுடனும் மேலிடத்தின் ஒப்புதலுடனும் நாராயணசாமி முதல்வரானார். தேசிய அரசியலில் ஈடுபட்டு வந்த அவர், திடீரென்று மாநில அரசியலில் களம் இறங்கினார்.

ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெல்ல வேண்டிய நிலையில், நெல்லித்தோப்பில் வென்றிருந்த எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அத்தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டார்.

தனக்காக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த ஜான்குமாருக்கு டெல்லி பிரதிநிதி பதவியை பெற்றுத் தந்தார் நாராயணசாமி. இச்சூழலில் மக்களவைத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம் போட்டியிட்டு வென்றார். அதையடுத்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.

இச்சூழலில் காமராஜர் நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இத்தொகுதியில் காங்கிரஸில் யார் போட்டியிடுவார் என்பதில் கடும் போட்டி நிலவியது. கடும் போட்டிக்கு இடையே தனக்காக நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான்குமாரை வேட்பாளராக்க முயற்சி எடுத்தார் நாராயணசாமி. காங்கிரஸில் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தொடங்கி பலரும் இத்தொகுதியில் ஆதரவாளர்களை போட்டியிட முயற்சித்தும் கிடைக்கவில்லை.

டெல்லி வரை சென்று ஜான்குமாரை வேட்பாளராக்கியதுடன், நாள்தோறும் ஜான்குமாருக்காக பிரச்சாரத்தையும் நாராயணசாமி மேற்கொண்டார். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக திருப்பதி சென்று வேண்டுதலுக்காக மொட்டை அடித்து புதுச்சேரிக்கு நாராயணசாமி திரும்பினார். தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜான்குமார் வென்றதால் உற்சாகமாக பேட்டி மழை பொழிந்தார் நாராயணசாமி. ஏனெனில் இதன் பின்னால் நாராயணசாமியின் தேர்தல் கணக்கு வெல்லத் தொடங்கியிருப்பதும் ஓர் காரணம்.

இதுதொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "காமராஜர் தொகுதி விரைவில் முதல்வரின் தொகுதியாக மாறப் போகிறது. ஏனெனில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் தொகுதியில் இருந்து போட்டியிடவே முதல்வர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார். இத்தொகுதியில் இரு முறை எம்எல்ஏவாக இருந்த வைத்திலிங்கம் தற்போது எம்.பி.யாகிவிட்டார். அதையடுத்து இடைதேர்தலில் வேறு யாரையும் நிறுத்தினால் அங்கு தன்னால் போட்டியிட முடியாது என்பதால் தனக்கு தொகுதியை விட்டுத் தந்த ஜான்குமாரை இத்தேர்தலில் கடும் முயற்சி எடுத்து வேட்பாளராக்கினார்.

தற்போது ஜான்குமார் இத்தொகுதியில் வென்றாலும், வரும் 2021-ம் ஆண்டு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லித்தோப்பில் போட்டியிடவே அவர் விரும்புகிறார். அதனால் காமராஜர் நகர் தொகுதி நாராயணசாமியின் தொகுதியாக மாறும். இந்த அரசியல் கணக்கில் நாராயணசாமி தற்போது வென்றுள்ளதே அவர் உற்சாகத்துக்கு முக்கியக் காரணம்," என்கின்றனர்.

செ.ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in