என்.ஆர்.காங்கிரஸின் தொடர் தோல்வி - சரிவிலிருந்து மீட்பாரா ரங்கசாமி?

ரங்கசாமி: கோப்புப்படம்
ரங்கசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி என்.ஆர்.காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தை சரியாக பயன்படுத்தாதது தொடங்கி கட்சியில் தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் தராதது வரை பல விஷயங்களும் இதற்குக் காரணமாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரையாண்டுகளே உள்ளதால் சரிவிலிருந்து ரங்கசாமி கட்சியை மீட்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய இரு மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தது. அக்கட்சி நிறுவனர் ரங்கசாமி, கடந்த 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார். உள்ளூர் கட்சி என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதையடுத்து வந்த மக்களவைத் தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் வென்றது. அவர்களின் கூட்டணிக் கட்சியான பாஜக ஆட்சியமைத்தது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை ரங்கசாமி பூர்த்தி செய்யவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியடைந்தது. அப்போது முன்னாள் அமைச்சர்கள் ஒருவர் கூட வெற்றி பெறாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரானார் ரங்கசாமி.

இத்தேர்தலுக்கு பிறகு தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான அதிமுகவும் தோல்வியடைந்தன.

எதிர்க்கட்சித் தலைவரான ரங்கசாமி, அப்பதவியை சரியாக பயன்படுத்தாததே முக்கியக் காரணம் என்கின்றனர் கட்சியினர்."கட்சி நிர்வாகிகளுக்கு கூட உரிய அங்கீகாரம் தராமல் இருந்தது, கட்சியிலும் கடும் அதிருப்தி உள்ளது.

அதை முன்னாள் எம்எல்ஏ நேரு வெளிப்படையாகவே தெரிவித்தார். தொண்டர்களுக்கு கட்சி அடையாள அட்டைக் கூட தரவில்லை. 9 ஆண்டுகளாகியும் தொகுதி நிர்வாகிகள் கூட நியமிக்கப்படவில்லை," என்கின்றனர்.

அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "மக்கள் அளித்த எதிர்க்கட்சி பதவியை பயன்படுத்தாததுதான் முக்கியக் காரணம். ஆட்சியின் குறைபாடுகளை தொடர்ந்து விமர்சிப்பதே இல்லை. மக்களுக்கான பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சி செயல்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததே தோல்விகளுக்குக் காரணம்.

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் செல்லாமல் தொடர்ந்து இயங்குவதை மக்கள் விரும்புகின்றனர். இனி வரும் செயல்பாட்டை பொருத்தே ஒன்றரையாண்டுகளில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ் எதிர்கொள்ள முடியும். கட்சியை சரிவிலிருந்து ரங்கசாமி மீட்பாரா என்ற கேள்விக்கு விடை அவரது செயல்பாட்டை கொண்டே முடிவு எடுக்க முடியும்" என்கின்றனர்.

செ.ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in