

சென்னை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய – சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்ததாக இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் சன்வெய்டங், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (அக்.25) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய – சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்தமைக்காக இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் சன்வெய்டங், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இந்தியா – சீன உச்சி மாநாட்டுக்கு வருகை புரிந்த சீன குடியரசுத் தலைவர் மற்றும் குழுவினருக்கு மிகச் சிறந்த முறையில் வரவேற்பு ஏற்பாடுகளை செய்தமைக்காகவும், வழியெங்கும் சிறப்பான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமைக்கும் சிறந்த உபசரிப்புக்காகவும், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
சீன - இந்திய மக்களிடையே கலாச்சாரம் மற்றும் பரிமாற்றங்களையும் மென்மேலும் மேம்படுத்துவோம் என்றும் தனது நன்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.