Last Updated : 25 Oct, 2019 12:08 PM

 

Published : 25 Oct 2019 12:08 PM
Last Updated : 25 Oct 2019 12:08 PM

விக்கிரவாண்டி: அதிமுக வெற்றி எப்படி சாத்தியமானது?

விக்கிரவாண்டி தொகுதியில் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது

விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 1 லட்சத்து 13,766 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட 44,924 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுகவின் வெற்றிக்கு என்ன காரணம் என இரு கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:

விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி பெற்றிருப்பதை சாதாரண வெற்றியாக கணக்கில் கொண்டு கடந்து சென்றுவிட முடியாது. கடந்த மக்களவைத் தேர்தலுடன் நடந்த 12 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் திமுகவை விட குறைந்த இடங்களில் தான் ஆளும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது.

இந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம் துல்லிய திட்டமிடல் தான். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணனின் தேர்தல் வியூகம் இதிலும் வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் வெற்றி என்பது தனிப்பட்ட முறையில் சி.வி.சண்முகத்திற்கு முக்கியமான ஒன்று. மாவட்டத்தில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் வேறு.

சராசரி இடைத்தேர்தலாக தொடங்கிய விக்கிரவாண்டி தேர்தல், திமுக தலைவர் ஸ்டாலினின் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையால், கவுரவப் பிரச்சினையாக வேகமெடுத்தது. கடைசியில் அந்த அறிக்கையே ஸ்டாலினுக்கு எதிராகிப் போனது. எந்த இடைத் தேர்தலிலும் காண்பிக்காத வேகத்தை ராமதாஸ், ஸ்டாலின் அறிக்கைக்குப் பிறகு தொகுதியில் களமிறங்கி, அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு பிரச்சாரம் செய்தார்.

வன்னியர் சமுதாய மக்கள் என்றும் எனது பின்னால்தான் உள்ளனர் என்பதை காண்பிக்க வேண்டிய கட்டாயம் ஒரு புறம் இருந்தாலும், அதிமுக வேட்பாளர் தோல்வியடையும்பட்சத்தில், ஸ்டாலினின் வன்னியர் ஆதரவு பிரச்சாரம் அவருக்கு சாதகமாகிவிடுமோ என்ற ஐயத்தால், பாமகவினரை முழு வீச்சில் களப்பணியில் ஈடுபட வைத்தார்.

இதுவும் அதிமுக வெற்றிக்கு பிரதான காரணம். எடப்பாடியா, ஸ்டாலினா?, சி.வி.சண்முகமா, பொன்முடியா ? என்ற நிலை மாறி ராமதாஸா, ஸ்டாலினா என்று இத்தேர்தல் போக்கு மாறியதுதான் பாமக பம்பரமாக களப்பணியாற்ற முக்கிய காரணியாக அமைந்திருந்தது.

கடந்த முறை அதிமுக பெற்ற வாக்குகள் 56,845, பாமக, 41,428, மக்கள் நலக்கூட்டணியில் இருந்த தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் திரும்பியதால் மக்கள் நல கூட்டணி பெற்ற வாக்குகளில் 50 சதவீதமான 4,990 ஐயும், பாஜக வாக்குகள் 1291-ஐ கூட்டினால் 1 லட்சத்து 04, 554 வாக்குகள் பெற்று இருக்க வேண்டும் ஆனால் இத்தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் 1 லட்சத்து 13,766 வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது கூடுதலாக 9,212 வாக்குகள் பெற்றுள்ளது.

அதே போல கடந்த தேர்தலில் திமுக 63,757 வாக்குகளோடு மக்கள் நலக்கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக பெற்ற வாக்குகள் 4990-ஐ கூட்டினால் 70,747 வாக்குகளாகும். ஆனால் இத்தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 68,842 வாக்குகள் பெற்றதால் 3,905 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது.

வழக்கமாக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இத்தகைய தேர்தல்களில் எதிரொலிக்கும். ஆனால் எதிர்க்கட்சிக்கு வாக்களித்து வீணடிப்பதைவிட ஆளுங்கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்தால் தொகுதிக்கு நன்மை என்ற அடிப்படையிலும் மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிகிறது.

ஸ்டாலின் வன்னியர் வாக்கு வங்கியைக் குறிவைத்து அறிக்கை அளித்தவுடன் இவர் தேர்தலுக்கு சாதியை கையிலெடுக்கிறார், பாஜக மதத்தை கையிலெடுக்கிறது, பிறகு பாஜகவை மட்டும் மதவாதக் கட்சி என்று கூறுவது ஏன் ? என்பது போன்ற விமர்சனங்கள் நடுநிலை வாக்காளர்கள் மத்தியிலும், சமூக வளைதளங்களிலும் டிரெண்டாகியது ஸ்டாலினுக்கு மிகப் பெரிய சறுக்கல்தான். மேலும் வன்னியர் அல்லாதவர்கள் வன்னியர்களுக்கு மட்டும் உள் ஒதுக்கீடு என்ற சிந்தனையும் திமுகவுக்கு எதிரானது.

மேலும் திமுகவில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், 52 எம்எல்ஏக்கள்,14 எம்பிக்கள், தேர்தல் பணியாற்றினாலும் அவர்களால் அதிமுகவின் வேகத்திற்கு எந்த வகையிலும் ஈடுகொடுக்க முடியவில்லை.

மேலும் மக்களவைத் தேர்தலைப் போல அல்லாமல் இத்தேர்தலில் அதிமுக தன் பிரச்சார யுக்தியை மாற்றி கடந்த காலங்களில் செய்ததையும், தொகுதிக்கு இனிவரும் காலங்களில் செய்யப்போவது என்ன என்பதை விளக்கமாக தெரிவித்தனர். மேலும் தமிழக அமைச்சர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டும், அந்த அதிகாரியின் பெயர் மொபைல் எண்ணை பொது மக்கள் முன்னைலையில் குறித்துக்கொண்டு, தேர்தலுக்கு பின் இப்பணி நடைபெறாவிட்டால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என விசிட்டிங் கார்டுகளையும் கொடுத்தனர்.

இதன் மூலம் தங்கள் குறைகளை ஆளும்கட்சி வேட்பாளர் வென்றால் தீரும் என்று நம்ப தொடங்கினர். திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது இத்தேர்தலில் வெற்றி பெற்றால் பெரிதாக மாற்றம் ஏற்படாது. அதேநேரம் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்றே பேசினார். தொகுதி பிரச்சினைகளை ஆட்சிக்கு வந்தால்தான் செய்ய முடியும் என்றார். இது மக்களிடம் எடுபடவில்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x