ரூ.4.55 கோடி மோசடியில் திமுக பிரமுகர் கைது

ரூ.4.55 கோடி மோசடியில் திமுக பிரமுகர் கைது
Updated on
1 min read

சென்னை

ஜவுளி வாங்கியதில் ரூ.4.55 கோடி மோசடி செய்த வழக்கில், திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் உள்ளிட்ட மூவரை ஈரோடு குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன். காடா துணி, வேட்டி உற்பத்தி மற்றும் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் அளித்த மனு:ஈரோடு மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்துவந்த கோட்டை ராமு, கடந்த ஆண்டு என்னை அணுகி, தான் ஜவுளித்தொழில் செய்து வருவதாகவும், தனது மனைவி, மகன் ஆகியோர் பங்குதாரர்களாக தொழிலில் உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 2018 நவ.17 முதல் 2019 ஏப்.26 வரை பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.4.55 கோடி மதிப்புக்கு காடா துணியை பெற்றுச் சென்றனர்.

பணம் கேட்ட போது எல்லாம், மீண்டும் சரக்கு அனுப்பினால் பணம் தருவதாக தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த உறுதியால் பலமுறை சரக்குகளை அனுப்பி வைத்தோம். பணத்தை பலமுறை கேட்டும் பலனில்லை.

கடந்த 2019 ஆக.26-ல் கோட்டை ராமு வீட்டுக்குச் சென்று கேட்ட போது, பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அவரது மகன், மனைவி, உறவினர்கள் உடன் இருந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கோட்டை ராமு (46), அவரது மகன் அருண் குமார், தங்கராஜன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். கோட்டை ராமுவின் மனைவி மணிமேகலை, மல்லிகா, கார்த்திகா, தேவேந்திர குமார், ராஜேஷ், ஆனந்த், வேலுமணி ஆகிய 7 பேரை தேடி வருகின்றனர்.

கோட்டை ராமு கைதானதை அடுத்து, ஈரோடு மாநகர இளைஞரணி அமைப்பாளர் பதவியில் இருந்து திமுக தலைமை அவரை நீக்கி, புதிய நிர்வாகியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in