

விழுப்புரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செஞ்சி சந்தையில் ரூபாய் 9 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
செஞ்சி வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 9 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (அக்.27) கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் வெள்ளிக்கிழமை வார சந்தைக்கு இன்று (அக்.25) காலையில் வருகை தந்தனர்.
இன்று அதிகாலை முதல் வேலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆடு வளர்ப்பவர்கள், செம்மரி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் வாகனத்தில் செஞ்சி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
இதேபோல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் தமிழகத்திலிருந்து ஏராளமான வியாபாரிகளும் செஞ்சி சந்தைக்கு வருகை தந்து ஆடுகளை வாங்கினர்.
ஒரு ஆட்டின் விலை சுமார் ரூ.5 ஆயிரம் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை ஆகின. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. ரூ.9 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டன. மேலும் செஞ்சி சுற்றியுள்ள பகுதிகளில் மேய்ச்சலுக்காக மலையும் காடுகளும் சார்ந்த பகுதி என்பதால் இங்கு வளர்க்கப்படும் ஆடுகளின் கறி சுவையாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிக அளவில் வருகை தந்து ஆடுகைளை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.