

சென்னை
நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டத்தைத் தொடர்ந்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படித்துவரும் மாணவர்களின் விண்ணப்பங்களை ஒரு வாரத்துக்குள் நேரில் சென்று ஆய்வு செய்வதோடு, அவர்களது கைவிரல் ரேகை பதிவுகளையும் பெற வேண்டும் என்று சிபிசிஐடி மற்றும் தடயவியல் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ள 4,250மாணவர்களின் பெருவிரல் கைரேகை பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாரிடம் தேசிய தேர்வு முகமை ஒப்படைக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் என்பது குறித்து பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படித்துவரும் மருத்துவ மாணவர்களின் கைரேகை உள்ளிட்ட விபரங்கள் தங்களிடம் இல்லை என்றும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் பெருவிரல் கைரேகை பதிவுகள், ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் மற்றும் மருத்துவ தேர்வுக் குழுவிடம் வழங்கிவிட்டதாகவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் கைரேகைபதிவுகள் சிடியில் வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு மாணவர்களின் அசல் கைரேகை பதிவு வேண்டும் எனவும் சிபிசிஐடி தரப்பில், தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்றுவரும் 4,250 மாணவர்களில் 54 பேர் தவிர மற்றவர்கள் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் என இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா?இந்த மையங்களைக் கண்காணிப்பது யார்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் அரசிடம் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் இதுபோன்ற தனியார் நீட் பயிற்சி மையங்களில் வகுப்புகள் எடுத்துவருவதாகவும், இந்த மையங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர்.
நீட் தேர்வின்போது மாணவர்களின் கைரேகைப் பதிவுகள், படிவங்கள் மூலமாக பெறப்பட்டதா அல்லது பயோமெட்ரிக் முறை மூலமாக பெறப்பட்டதா என்பது குறித்து தேசிய தேர்வு முகமை இன்று பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பயின்றுவரும் மருத் துவ மாணவர்களின் விண்ணப்பங்களை சிபிசிஐடி மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஒரு வாரத்துக்குள் நேரில் சென்றுஆய்வு செய்வதோடு, மாணவர்களின் கைரேகை பதிவுகளையும் பெற வேண்டும். இந்த ஆய்வை மருத்துவக் கல்லூரி முதல்வரின் முன்னிலையில் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்எனவும் உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.