தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம்; அரசு பேருந்துகளில் முதல்நாளில் ஒரு லட்சம் பேர் பயணம்: சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகரிப்பு

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம்; அரசு பேருந்துகளில் முதல்நாளில் ஒரு லட்சம் பேர் பயணம்: சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்றுமுதல் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3,267 பேருந்துகளில் சுமார் ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக ஆடைகள், பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், நேற்றுமுதல் சொந்தஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்துரயில்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லத் தொடங்கினர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று மாலைக்கு பிறகு மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது.

பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தற்காலிக நடைமேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல், திட்டமிட்டபடி, கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்தும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் நேற்றுமுதல் இயக்கப்பட்டன.

992 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 3,267 பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் நாளான நேற்று,அரசு பேருந்துகளில் மட்டும் சுமார்ஒரு லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

சனி, ஞாயிறு விடுமுறை வருவதால், பயணிகள் கூட்டம் இன்றுமேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று 1,763 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 3988 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ரயில் நிலையங்களில் கூட்டம்இதேபோல், சென்ட்ரல் மற்றும் எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களுடன் 5-க்கும் மேற்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் படிகளில் நின்றுகொண்டு செல்லும் அளவுக்கு கடும் நெரிசல் இருந்தது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்று மாலையில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in