

கிருஷ்ணகிரி
'பிகில்' திரைப்படம் கிருஷ்ணகிரியில் திரையிடுவதில் தாமதமானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
விஜய் நடித்து, அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம், இன்று (அக்.25) வெளியானது. இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு நேற்று அனுமதி அளித்தது. இத்திரைப்படம் இன்று அதிகாலை 4 மணி முதலே தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள 3 திரையரங்குகளில் 'பிகில்' திரைப்படம் பார்க்க அதிகாலையில் குவிந்த ரசிகர்கள், படம் வெளியிட தாமதம் ஆவதாகக் கூறி ஆத்திரமடைந்தனர். இதையடுத்து சாலையில் வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் தடுப்புகள் மற்றும் கடைகளின் பேனர்கள் உள்ளிட்டவற்றை சாலையில் போட்டு உடைத்தனர். இதனால், கிருஷ்ணகிரியின் மையப்பகுதியான ரவுண்டானா பகுதி, போர்க்களம் போல மாறியது.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.’பிகில்' திரைப்படம் திரையிடுவதில் தாமதமானதால், ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.