

திருப்பத்தூரில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூரைச் சேர்ந்த பி.வேலாயுதராஜா, புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் ‘குன்றக்குடி ஆதீனக் கோயில்களின் வரலாறு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். திருப்பத்தூரில் ஒரு பலகை கல்வெட்டு இருப்பதை இவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து பேராசிரியர் வேலாயுதராஜா கூறியதாவது:
தூண் கல்வெட்டு, சுவர் கல்வெட்டு வகைகளில் இக்கல் வெட்டு பலகைக் கல்வெட்டு வகையாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலைச் சேர்ந்த ஆறுமுக முதலியார், நாகதப் பண்டாரம் என்ற இருவரும் சேர்ந்து தேரோடும் வீதியில் எழுந்தருளி இருக்கிற ஆறுமுகப் பிள்ளையாருக்கு (முருகப் பெருமான்) திருவிளக்கு எரிப்பதற்காக பிறா ஊரணி பகுதியில் வெங்களப்ப நாயக்கருடைய தர்மமாக ஒரு மா நிலம் சர்வமானியமாக கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இதற்கு யாதேனும் ஒருவர் கேடு நினைத்தால் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தோஷத்தை அடைவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
வெங்களப்ப நாயக்கர் என்பவர் சிறுகூடல்பட்டியைச் சேர்ந்த குமாரப்பேட்டையில் ஜமீன்தாராக விளங்கியவர் என்பதும், இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு (கி.பி.1647) என்பதை குன்றக்குடி வரலாறு தெரிவிக்கிறது.
இக்கல்வெட்டில் எழுத்துக் களோடு சூலமும், அங்குசமும் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அங்குசம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மிகவும் அரிதான ஒன்று என்றும், சூலம் சிவபெருமானின் ஆயுதமாகவும், அங்குசம் தர்மத்தைக் காப்பதைக் குறிப்பதாகவும் உள்ளது எனத் தெரிவித்தார்.