

சென்னை
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாததால், அரசுடாக்டர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இருப்பினும், அவசர சிகிச்சை மற்றும்உயிர்காக்கும் பிரிவு, காய்ச்சல்பிரிவு மருத்துவர்கள் பணிக்குச் செல்வார்கள் என அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும், எம்சிஐ விதிப்படி டாக்டர்களின் எண்ணிக்கையைமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குறைக்கக் கூடாது,முதுநிலை மருத்துவப் படிப்பைமுடித்துள்ள அரசு மருத்துவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர்ந்துபோராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அரசு டாக்டர்கள் ஒன்றாக இணைந்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டமைப்பை தொடங்கி கடந்த மாதம் காலவரையற்ற உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 6 வாரத்தில் கோரிக்கைகள் பற்றி முடிவு எடுப்பதாகவும், கோரிக்கைகளை பரிசீலனை செய்ய ஐஏஎஸ் அதிகாரிசெந்தில்ராஜ் என்பவரை நியமிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையேற்று, அரசு டாக்டர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் 6 வாரம் கடந்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் இன்றுமுதல் அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி, அவசர சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் பிரிவு, காய்ச்சல் பிரிவு மருத்துவர்கள் பணிக்கு செல்வார்கள் எனஅரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த அறுவை சிகிச்சைகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட் டுள்ளது.