

சென்னை
சென்னையில் பட்டாசு விற்பனை களைகட்டியது. தீவுத்திடல், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தீபாவளியையொட்டி அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், வடபழனி, நந்தம்பாக்கம், கொட்டிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை விட்டுவிட்டு பெய்தது.
அதனால், விற்பனை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பட்டாசு விற்பனையாளர்களிடம் நிலவியது. ஆனால் தற்போது மழை இல்லாததால், பட்டாசுக் கடைகளில் விற்பனை சூடுபிடித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளியை முன்னிட்டு வழக்கம்போல விற்பனையாகும் கம்பி மத்தாப்பு, குருவி வெடி, சாட்டை, தரைச்சக்கரம், சரவெடிகளுடன் 100 வகையான நவீன ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் பசுமை பட்டாசுகளும் விற்கப்படுகின்றன. பொதுமக்களின் வசதிக்காக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் பட்டாசுகள் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10 ஆயிரம் வாலா வெடிரூ.5,800-க்கும், பனோரமா என்ற பெயரில் 500 ஷாட் வெடி ரூ.11,500-க்கும் கிடைக்கிறது. சில வகை பட்டாசுகளுக்கு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ரூ.600 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான கிஃப்ட் பாக்ஸ்களும் விற்கப்படுகின்றன.
மேலும், டாம் அண்ட் ஜெர்ரி, டோரா, டிரை கலர் பவுண்டைன், பிளவர் பாட், பார்பி டால், கிங் ஆப் கிங், ஜம்பிங் பிராக் போன்ற பெயர்களில் வந்துள்ள பட்டாசுகள் சிறுவர், சிறுமியரை வெகுவாகக் கவர்கின்றன. அதேபோல், ஹைட்ரஜன் பாம், 100 புல்லட் சரவெடி, 10 ஆயிரம் புல்லட் சரவெடிகள், ராக்கெட் உள்ளிட்ட பெரியவர்களுக்கான வெடி வகைகளும் உள்ளன.
இந்த ஆண்டு புதிய வரவான ப்ளூ சீ, கிரேப் கார்டன், நயாகரா நீர்வீழ்ச்சி, ஹேப்பி ட்ரீம்ஸ் போன்றவை வானில் சென்று வெடிப்பதுடன் வட்ட வடிவிலும், நட்சத்திர வடிவிலும், வண்ணத்துப் பூச்சி, பூங்கொத்து போலவும் வர்ணஜாலம் காட்டும் என்கின்றனர் பட்டாசு வியாபாரிகள்.