Published : 25 Oct 2019 08:16 AM
Last Updated : 25 Oct 2019 08:16 AM

இடைத்தேர்தல் வெற்றியால் உற்சாகம்: அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள அதிமுக

எம்.சரவணன்

சென்னை

திமுக, காங்கிரஸ், மதிமுக, இடது சாரிகள் கொண்ட மெகா கூட்டணி பலத் தையும் மீறி விக்கிரவாண்டி, நாங்கு நேரியில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடந்தது. மக்கள வைத் தேர்தலில் 39 தொகுதிகளில் 38-ல் வென்ற திமுக கூட்டணி, இத்தேர்தலிலும் காங்கிரஸ், மதிமுக, இரு கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என மெகா கூட்டணி பலத்துடன் களமிறங்கியது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நடந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் 8,141 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றதும், திமுக வுக்கு நம்பிக்கையை தந்திருந்தது.

வேலூர் உட்பட மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், அதிமுக சற்று சோர்ந்து போயிருந் தாலும், 22 பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலில் 9-ல் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட உற்சாகத்துடன் அக்கட்சி களமிறங்கியது. பாமக, தேமுதிக, பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி களையும் தேர்தல் பணியில் அதிமுக ஈடுபடுத்தியது. இந்த நிலையில், திமுக கூட்டணி பலத்தையும் மீறி விக்கிரவாண்டியில் 44,924, நாங்கு நேரியில் 33,445 வாக்குகள் வித்தியாசத் தில் அதிமுக அமோக வெற்றி பெற் றுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால் 2017 பிப்ரவரி 16-ம் தேதி பழனிசாமி முதல்வரானார். அப்போதிருந்தே, ‘அதிமுக ஆட்சி கவிழ்ந்து விரைவில் தேர்தல் வரப்போகிறது.. திமுக ஆட்சிக்கு வரப்போகிறது..’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் அக்கட்சியினர் பலரும் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால், இரண் டரை ஆண்டுகளுக்கும் மேலாக முதல் வர் பழனிசாமி அரசு தொடர்கிறது.

இந்த சூழலில், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வசம் இருந்த 2 தொகுதிகளையும் கைப்பற்றியதன் மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக அதிமுக உருவெடுத்துள்ளது.

ஆளும்கட்சிக்கான சாதகமான அம்சங்கள், அமைச்சர்கள், கட்சியின ரின் கடும் உழைப்பு ஆகியவையே இந்த வெற்றிக்கு காரணமாக கூறப் படுகிறது. அதேநேரம், மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற் றங்களும் முக்கிய காரணம் என்கிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:

5 ஆண்டுகளும் மத்திய பாஜக அரசை விமர்சித்த அதிமுக, கடைசி நேரத்தில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்ததை மக்கள் ஏற்கவில்லை. ஆனால், தமிழகம் தவிர்த்து நாடு முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்ததும், தமிழக மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தேர்தலில்கூட அது எதி ரொலித்தது. ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுக, ஒருசில மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட்டில் நடந்த வேலூர் தேர்தலில் வெறும் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றது.

சமீபத்தில் சீன அதிபர் உடனான சந்திப்புக்காக சென்னை வந்த பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் 2 நாட்கள் தங்கியது, தமிழின் சிறப்புகளை பேசியது ஆகியவையும் தமிழக மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிமுகவின் அமோக வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு பாஜக தலைவரிடம் பேசியபோது, ‘‘மக்களவைத் தேர்தல், வேலூர் தேர்தலில் பாஜக, மோடியை முன்னிறுத்தி அதிமுக பிரச்சாரம் செய்யவில்லை. பாஜக கூட்டணிக் கட்சி என்பதை வேலூர் பிரச்சாரத்தில் குறிப்பிடவே இல்லை.

ஆனால், இந்த இடைத்தேர்த லில் ‘பாஜகவுடன் கூட்டணி’ என்று அதிமுக வெளிப்படையாகவே அறிவித் தது. பிரதமர் மோடியை புகழ்ந்தும், பாராட்டியும் அமைச்சர்கள் பிரச் சாரம் செய்தனர். மோடியின் அணுகு முறை தமிழக மக்களை வெகுவாக ஈர்க்கத் தொடங்கியுள்ளது’’ என்றார்.

திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும், விக்கிரவாண்டி யில் பாமக வாக்கு வங்கி, அங்கு தேமுதிகவுக்கு இருக்கும் செல்வாக்கு, பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சாரம் ஆகியவை அதிமுகவின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளன. திமுக வின் பலம் பொருந்திய க.பொன் முடியை எதிர்கொள்ள அதிமுகவில் அமைச்சர் சி.வி.சண்முகம் இருந்ததும் அதிமுக வெற்றிக்கு முக்கிய காரணம் என்கின்றனர்.

நாங்குநேரியில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள காங்கிரஸ், திமுக துணையுடன் எப்படியும் வென்றுவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தது. ஆனால், 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விக்கிரவாண்டியில் பாமக போல, நாங்குநேரியில் அதிமுகவுக்கு வலு வான கூட்டணிக் கட்சி இல்லை. தவிர, நாங்குநேரியில் கணிசமான வாக்குகளைக் கொண்ட புதிய தமிழகம் கட்சி, தேர்தலை புறக்கணித்தது. இதை யும் மீறி அதிமுக வென்றிருக் கிறது. புதிய தமிழகத்தின் தேர்தல் புறக் கணிப்புகூட, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் வாக்கு கள் காங்கிரஸுக்கு செல்லாமல் தடுப்பதற்கான அதிமுகவின் தேர்தல் உத்தி என்றும் ஒரு கருத்து உள்ளது.

கிறிஸ்தவ நாடாரான காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு எதிராக, இந்து நாடாரான நாராய ணனை நிறுத்தியது, கிறிஸ்தவ சபை நிர்வாகிகளை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசியது, டிடிவி தினகரனின் அமமுக போட்டி யிடாதது ஆகியவையும் அதிமுக வுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் இரு தொகுதி வெற்றி அதிமுகவுக்கு பெரும் பலத்தை யும், கட்சியினரிடம் உற்சாகம், நம் பிக்கையையும் கொடுத்திருக்கிறது.இந்த தேர்தலில் ‘பாஜகவுடன் கூட்டணி’ என்பதை அதிமுக வெளிப்படையாகவே அறிவித்தது. பிரதமர் மோடியை புகழ்ந்தும், பாராட்டியும் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தனர். மோடியின் அணுகுமுறை தமிழக மக்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x