சாதனையாளர்களைக் கொண்டாடிய ‘மகுடம் விருதுகள்’

சாதனையாளர்களைக் கொண்டாடிய ‘மகுடம் விருதுகள்’
Updated on
2 min read

கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, சமூக சேவை எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ‘மகுடம் விருதுகள்’ விழாவை நடத்தி வருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி. சாதனையாளர்களை அலசி ஆராய்ந்து, அவர்களில் துறைதோறும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, விருதுகள் வழங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கவுரவித்து வருகிறது.

மூன்றாவது ஆண்டாக, 2019-ம் ஆண்டுக்கான ‘மகுடம் விருதுகள்’ வழங்கும் விழா, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கிருபாகரன், மகாதேவன், சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அரசுப்பள்ளி, அரசு மருத்துவர், சமூக சேவகர், விளையாட்டு வீரர், எழுத்தாளர், நடிகர், நடிகை, இயக்குநர், தொழில் முனைவோர், தொழில் ஆளுமை என 10 பிரிவுகளில் சிறந்து விளங்கிய 13 பேருக்கும், தமிழருக்குப் பெருமை சேர்த்த தமிழர் பெருமிதம் என்ற சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கல்லாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மடிவாளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இரண்டுக்கும் சிறந்த அரசுப்பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பக மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாருக்கு, சிறந்த அரசு மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது.

பழங்குடி கிராமங்களில் கல்விப்பணியைத் தொடர்ந்து செய்துவரும் கிராமப்பார்வை குழுவினருக்கு, சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த அனுராதா, சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கும், ‘சுளுந்தீ’ நாவலுக்காக முத்துநாகுவுக்கும் சிறந்த எழுத்தாளர் விருது வழங்கப்பட்டது. ‘பேரன்பு’ படத்துக்காக மம்மூட்டியும், ‘சீதக்காதி’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களுக்காக விஜய் சேதுபதியும் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்டனர்.

சிறந்த நடிகைக்கான விருது ‘கனா’ படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது ‘பேரன்பு’ படத்துக்காக ராம்-க்கும் வழங்கப்பட்டது. சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜுக்கு வழங்கப்பட்டது. சிறந்த தொழில் ஆளுமைக்கான விருதை, பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான டி.ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.

தமிழருக்குப் பெருமை சேர்த்த ‘தமிழர் பெருமிதம்’ என்ற சிறப்பு விருது, கீழடி அகழாய்வுக்குக் காரணமாக இருந்து கீழடி நாயகர்களுக்கு வழங்கப்பட்டது. கீழடி அகழாய்வுக்கு நிலத்தை இலவசமாக வழங்கிய நில உரிமையாளர்கள் தொடங்கி, அகழாய்வை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்ற ஆய்வுக்குழுவினர் வரை அனைவரும் மேடையேற்றி கவுரவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in