

செங்கல்பட்டு
கல்பாக்கத்தில் விபத்தில் சிக்கிய தொழிலாளி ஒருவர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய மருத்துவமனை கேட்டதன்பேரில் அந்த நிலையிலும் நிராதரவான அக்குடும்பம் தானம் செய்ய ஒப்புக்கொண்டது.
கல்பாக்கம் சத்ராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (51). காண்ட்ராக்ட் தொழிலாளியான இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் யாருக்கும் திருமணமாகவில்லை.மூத்த மகள் இதய நோயாளி. ராமுவின் ஒற்றை வருமானத்தை வைத்துதான் குடும்பத்தைத் தள்ளும் நிலையில் சூழல் இருந்துவந்தது.
இந்நிலையில் அந்தக் குடும்பத்துக்குப் பேரிடியாக அந்தத் தகவல் வந்தது. கடந்த 19-ம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 7 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற ராமு, அதன்பின் பிணமாகத்தான் வீட்டுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது.
நடந்தது என்ன?
இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற ராமு மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் கீழே விழுந்தார். உடலில் ஒரு காயமும் இல்லாமல் மயங்கிய நிலையில் சரிய, தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் துடித்துப் போயினர். சாதாரண மயக்கத்தில்தான் தந்தை இருக்கிறார் என்ற நம்பிக்கையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு ராமுவின் உடல்நிலையைச் சோதித்த அவர்கள் கோமா நிலையில் உள்ளார் என ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அவரது மகள் நந்தினியிடம் கேட்டோம். ''எங்களுக்கென்று எந்த ஆதரவும் இல்லை சார். இருந்த ஒரே உயிரையும் பறிகொடுத்துட்டு நிற்கிறோம்'' என்று கண்ணீர்ப்பெருக்குடன் கதறினார் நந்தினி. அவரால் அழுகையை அடக்கவே முடியவில்லை.
ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு நந்தினி கூறியதாவது:
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அப்பாவுக்கு சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை தேறாத நிலையில் அம்மா, என் சகோதரர்கள், என் சகோதரி மற்றும் என்னை மருத்துவர்கள் அழைத்தனர். அப்பா மூளைச்சாவு அடைந்துவிட்டார். இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்கள்.
எங்களால் அதை நம்பவே முடியவில்லை. அவர் இல்லாமல் நாங்கள் என்ன செய்வதென்று புரியவில்லை. எங்கள் வாழ்க்கையே இருண்டுபோனது போல் இருந்தது. எங்களுக்கு ஆறுதல் சொல்லவோ தேற்றவோ ஆள் இல்லை.
அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேசுகிறார்...
மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க சம்மதமா எனக்கேட்டார்கள். என் தந்தைதான் மறைந்துவிட்டார்.வருத்த வடுக்கள் எங்களோடு இருக்கட்டும் என்று தீர்மானித்தோம். எங்கள் வருத்தங்களை பிறருக்கு வாழ்க்கைப் பரிசாக அளித்துள்ளோம். ஆம். கண்கள், இதயம், கிட்னி மற்ற உறுப்புகள் மூலமாக என் அப்பா எங்கேயாவது யார் மூலமாவது வாழ்ந்து கொண்டிருப்பார். என் அப்பாவின் உடல் உறுப்பு தானத்துக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. உடனே ஒப்புக்கொண்டோம்.
அதன் பின்னர் என்ன நடந்தது?
மூளைச்சாவு தானா என உறுதிப்படுத்தும் சோதனைகளை நடத்தி உறுதி செய்தபின்னர் அவரது உடல் உறுப்புகளை நேற்று எடுத்தார்கள். இன்று காலை அவர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. உடல் உறுப்பு தானத்துக்குப் பிறகு மாலையில் எங்களிடம் அப்பாவின் உடலைக் கொடுத்தார்கள்.
உங்களுக்கு வேறு ஏதாவது உதவியை மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுத்தார்களா?
சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. எந்தவித பிரதிபலனும் பாராமல் உதவி செய்தோம். ஆனால் அப்பாவின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் வருத்தமாக இருந்தது.
ஆம்புலன்ஸ் தரவில்லையா? என்ன காரணம்?
உடலை எடுத்துச் செல்லும் ஃப்ரீசர் பாக்ஸ் இல்லை, அதனால் ஆம்புலன்ஸ் இல்லை என இழுத்தார்கள். கேட்கக்கூடாத தருணத்தில் உடல் உறுப்பு தானம் செய்ய முடியுமா என்று கேட்டார்கள். நாங்கள் எதுவுமே சொல்லாமல் ஒப்புக்கொண்டோம். அதற்கு பிரதிபலனாக எங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பி அப்பாவின் உடலைக் கொண்டு செல்லக்கூட யாரும் உதவ முன்வரவில்லை. உடல் உறுப்பு தானம் முடிந்ததும் அப்பாவை அப்படியே விட்டுவிட்டார்கள்.
பிறகு எப்படி ஆம்புலன்ஸ் கிடைத்தது?
எங்களுடன் வந்த எங்கள் ஊர்க்காரர்கள் சத்தம் போட்டவுடன் பின்னர் ஆம்புலன்ஸ் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு மேல் அப்பாவின் உடலைக் கொண்டு சென்றோம். எங்கள் குடும்பமே என் அப்பாவின் வருமானத்தை நம்பித்தான் இருந்தது. அவரும் எங்களைத் தவிக்க விட்டுவிட்டு மறைந்துவிட்டார். எங்கள் குடும்பம் நிராதரவாக இருக்கிறது. எங்களுக்கு அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு நந்தினி தெரிவித்தார்.
ஏழைத்தொழிலாளி ஒருவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்துள்ளார். அவரது குடும்பத்தார் எவ்வித பிரதிபலனும் பாராமல் உதவும் உள்ளத்தோடு உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் அந்த உடலை மரியாதையாக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லக்கூட மருத்துவமனை நிர்வாகம் முன்வராதது வேதனைக்குரியது.
அவரது மகள் கேட்டபடி அவர்களது குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அரசு உதவித்தொகை அளிக்க வேண்டும். காவல் அதிகாரிகள் உரிய முறையில் விபத்து குறித்து எப்.ஐ.ஆர் போட்டு இன்சூரன்ஸ் கிடைக்க உதவ வேண்டும்.
ஏழ்மை நிலையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டால், அந்நபரின் இறுதிச் சடங்குக்கு ஆகும் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்.
உடல் உறுப்பு தானத்தை பிரதிபலன் பாராமல் அளிக்கும்போது அவர்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு அக்குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை அளித்தால் உடல் உறுப்பு தானம் செய்யும் விழிப்புணர்வை ஊக்கப்படுத்துவதாக அமையும். அரசு செய்யுமா?