

சென்னை
கல்கி சாமியார் அவரது குடும்பத்தினர் வைத்திருந்த வெளிநாட்டு கரன்சி மற்றும் வெளிநாட்டில் முதலீடு செய்த ஆதாரங்கள் அடிப்படையில் மத்திய அமலாக்கத்துறை ஃபெமா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 20 கிளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் ஸ்ரீ பகவானின் மகன் என்.கே.வி. கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
முதலீடுகள், பங்குதாரர்கள் குறித்தும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவடைந்ததாகத் தெரிவித்துள்ள வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரத்தை வெளியிட்டது.
கல்கி சாமியாரின் மகன் வீடு மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை 5 நாள் சோதனையில் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், கணக்கில் மறைக்கப்பட்ட மூலதனம் ரூ.61 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.
ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.85 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. நிறுவனங்களின் வட்டி வருவாயான ரூ.90 கோடியை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாமியார் குடும்பம் வெளிநாடுகளில் சொத்து குவித்துள்ளதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வெளிநாட்டு கரன்சிகள் ரூ.20 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டது, அந்நிய நாடுகளில் ஹவாலா மூலம் முதலீடு, ஆகிய காரணங்களால் இவை மத்திய அமலாக்கத் துறையின்கீழ் வருவதால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
(Foreign Exchange Management Act, 1999 (FEMA) ‘ஃபெமா’ எனப்படும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் கல்கி சாமியார் குடும்பத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.100 கோடி வரை முதலீடு செய்தது, ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் சிக்கியது போன்ற காரணங்கள் அடிப்படையில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணையில் இறங்க உள்ளது.
கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடியைத் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாகக் கருதிய ஃபெரா (FERA) சட்டத்தை 1999-ல் ரத்து செய்து, அதை சிவில் குற்றமாக மாற்றி ஃபெமா (FEMA) என்ற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்கீழ்தான் தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தார் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரத் தகல்கள் தெரிவிக்கின்றன.