Last Updated : 24 Oct, 2019 05:18 PM

 

Published : 24 Oct 2019 05:18 PM
Last Updated : 24 Oct 2019 05:18 PM

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளைக் கைப்பற்றிய அதிமுக: 2021 தேர்தலுக்கான முன்னோட்டமா?- ஓர் அலசல்

நாங்குநேரியில் வெற்றிக் கொண்டாட்டத்தில் அதிமுகவினர் | படம்: மு.லெட்சுமி அருண்.

தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அதிமுக கைப்பற்றியுள்ளது.

திமுக, காங்கிரஸிடம் இருந்த இரண்டு தொகுதிகளும் ஆளுங்கட்சியின் கைகளுக்கு மாறியுள்ளது. இதனால் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், இடைத்தேர்தல் முடிவு 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று முதல்வர் கூறியது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த அலசலுக்கு முன் விக்கிரவாண்டி, நாங்குநேரி முடிவுகளைப் பார்ப்போம்.

விக்கிரவாண்டியை நழுவவிட்ட திமுக:

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ.,வான ராதாமணி மறைவைத் தொடர்ந்தே அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் கௌதமன் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். விக்கிரவாண்டியில் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் தொட்டே அதிமுகவின் முன்னிலை தொடங்கியது. 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியாக 20-வது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13,407 வாக்குகளும், திமுக வேட்பாளர் 68,632 வாக்குகளும் பெற்றனர்.

இந்த சுற்றின் முடிவில், 44,775 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நாங்குநேரியிலும் அமோக வெற்றி..

நாங்குநேரியின் எம்.எல்.ஏ.,வாக இருந்த எச்.வசந்தகுமார் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இதனால் நாங்குநேரி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் ரூபி மனோகரனை களம் இறக்கியது. அதிமுகவில் இருந்து ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் களம் இறக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் களம் கண்டார். நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தலில் 66.10% வாக்குகள் பதிவாகின.

காலை வாக்கு எண்ணிக்கையில் சுணக்கம் ஏற்பட்டதால் இறுதிச் சுற்று முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 23-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாராயணன் 95,360 வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 61,913 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் 2,662 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட 23 வேட்பாளர்களில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளர்களை தவிர அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.

முதல்வர் சொல்வதுபோல் முன்னோட்டமா?

எதிர்க்கட்சியிடமிருந்து இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றிய மகிழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "திமுக இந்த இடைத்தேர்தலை 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்றது. அந்த முன்னோட்டத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இது 2021-ம் ஆண்டிலும் தொடரும்" எனக் கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத்தான் என்ற பொதுவான கருத்து இருந்தாலும்கூட 5 மாதங்களுக்கு முன் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை படுதோல்விக்குத் தள்ளிய மக்கள் இப்போது திமுக, காங்கிரஸைப் புறக்கணித்திருப்பது பல்வேறு வாதங்களை எழுப்பியுள்ளன.

இது தொடர்பாக அரசியல் நோக்கர் ஒருவர் கூறும்போது, "இந்த இடைத்தேர்தல் முடிவை வைத்து இதுதான் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று முழுக்க முழுக்க உறுதிபடத் தெரிவித்துவிட இயலாது.

அதேவேளையில், மக்களவைத் தேர்தல் முடிவை வைத்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அளவுகோலை நிர்ணயிக்கக் கூடாது என்பதை திமுக புரிந்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை ஏன் கூட்டணியைக் கூட திமுக இப்போதிருந்தே பரிசீலிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

நாங்குநேரியைப் பொறுத்தவரை தேவேந்திர குல வேலாளர் சமுதாயத்தினரின் தேர்தல் புறக்கணிப்பு அதிமுகவுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. எதிர்ப்பு மனநிலையுடன் அவர்கள் வாக்களித்திருந்தால் அந்த வாக்குகள் அனைத்தும் காங்கிரஸுக்கே சென்றிருக்கும். உள்ளூர் வேட்பாளரை நிறுத்தாதும் காங்கிரஸுக்கு நிச்சயமாக பின்னடைவைப் பெற்றுத் தந்திருக்கிறது. மண்னின் மைந்தன் என்ற டேக்லைனுடன் அதிமுக வாக்குகளை சரியாக அறுவடை செய்துகொண்டது" என்றார்.

"இன்னும் 2 ஆண்டு காலமே மாநில அரசின் ஆட்சிக்காலம் இருக்கும்நிலையில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினரை வெற்றி பெறவைத்தால் பெரிய அளவில் சவுகரியங்களைப் பெற்றுவிட முடியாது என்று நினைத்து மக்கள் ஆளுங்கட்சிக்கே வாக்களித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இடைத்தேர்தலுக்காக 2 தொகுதிகளிலுமே அமைச்சர்கள் களமிறங்கி தீவிரமாக வேலை செய்தனர். அதுவும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம். ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இது எதிரொலிக்கும் என்று சொல்லிவிட முடியாது. மக்கள் மாற்றத்தை விரும்புவது உண்மைதான். அதற்கான சரியான வாய்ப்புக்காகக் காத்திருப்பதால் இந்த இடைத்தேர்தலை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். அரசு ஊழியர்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிராக புகைச்சல் மனநிலையே இருக்கிறது. இது நிச்சயம் 2021-ல் எதிரொலிகும்" என்று பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக சாமானியர் ஒருவர் கூறும்போது, "அண்மைக்காலமாகவே வாக்குக்குப் பணம் வாங்கும் போக்கு வாடிக்கையாகிவிட்டது. இடைத்தேர்தலில் தாராளமாகப் புழங்கப்பட்ட பணமும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட வேண்டியதாகவே இருக்கிறது. மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். இப்போதுகூட இடைத்தேர்தலால் தீபாவளிப் பண்டிகைக்கு ஊர்க்காரர்கள் ஒருகை வசூல் பார்த்துவிட்டார்கள் என்றுதான் நான் சொல்வேன். இதேநிலை தொடர்ந்தால் வாக்குக்கு எல்லா கட்சிகளிடமும் பணம் பெற்றுவிட்டு இறுதியில் மனம் போன போக்கில் வாக்களிக்கும் பழக்கம் ஊடுருவும். இந்தப் போக்கு தொடர்வது தேர்தல் ஜனநாயகத்தை பாதாளத்துக்கு தள்ளிவிட்டுவிடும்" என்று எச்சரித்தார்.

சீமான் நிச்சயமாக சிந்திக்கத்தான் வேண்டும்!

2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஓரளவு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்திருந்தாலும்கூட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்த 'இனவாத அரசியல்' முற்றிலும் எடுபடாமல் போயுள்ளது. ஒருவேளை இது கசப்புணர்வைக்கூட ஏற்படுத்தியிருக்கலாம். அதன் காரணமாகவே, நாங்குநேரியில் சுயேச்சை வேட்பாளர் ஹரி நாடாரைவிட நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணன் குறைவாக வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

வெற்றியின் நிமித்தம் முதல்வர் சொல்வது போல் இது 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று உறுதியாகக் கூற இயலாது என்பதே அரசியல் நோக்கர்கள், சாமானியர்கள் என பலரும் முன்வைக்கும் பரவலான கருத்தாக இருக்கிறது.

மீண்டும் ஆள்வது வெகு நிச்சயம்: அமைச்சர் செல்லூர் ராஜூ

தேர்தல் முடிவுகள் தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பேசியபோது, '' 'அம்மா'வின் வழியில் நடக்கும் அதிமுக ஆட்சியின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி. இது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வதுபோல் 2021 சட்டப்பேரவைக்கான முன்னோட்டம்தான். நாங்கள் இதை எப்போதுமே சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அதிமுகதான் மீண்டும் ஆட்சியில் அமரும்.

ஏழை, எளிய மக்களுக்கு யாரை ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்று தெரியும். யார் அமர்ந்தால் தங்களுக்கான நன்மைகள் கிடைக்கும், யார் ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து நடக்காது, காவல்துறையினரின் நடவடிக்கையில் தலையீடு இருக்காது, நலத்திட்டங்கள் உரிய வகையில் வந்து சேரும் என்பது நன்றாகத் தெரியும்.

கிராமப் பொருளாதாரம் அதிமுக ஆட்சியில்தான் வளரும் என்பது மக்களுக்குத் தெரியும். அரசாங்கத்தின் வரிப்பணம் மக்கள் நலத்திட்டங்களுக்காக முழுமையாக செலவழிக்கப்படுகிறது. அதனால், தமிழகத்தை அதிமுகவே ஆள வேண்டும் என்பது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது’’ என்றார் செல்லூர் ராஜூ.

'இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு மக்கள் வழங்கிய வெற்றியல்ல பணம் கொடுத்த வாங்கிய வெற்றி' என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது தொடர்பான கேள்விக்கு, "தோல்வியடைந்தவர்கள் யாரும் வெற்றியாளர்களை மனம் திறந்து பாராட்டுவதில்லை. அவர் தோல்வியின் விரக்தியில் இருக்கிறார். கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாமல் பேசுகிறார். மக்கள் எப்போதுமே பணத்துக்காக வாக்களிக்க மாட்டார்கள். பணம் வாங்கினாலும்கூட தங்கள் மனதில் பட்டவர்களுக்கே வாக்களிப்பார்கள். கே.எஸ்.அழகிரி மக்களை கொச்சைப்படுத்துகிறார்" என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x