

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் இம்மாதம் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் இன்று வெளியிட்ட தகவல்:
"தமிழகத்தில் டாஸ்மாக் மதுவால் ஏற்படும் பாதிப்புகளும், சமூக அவலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பாதிப்பு பெரியவர்களைத் தாண்டி, இளைஞர்களைத் தாண்டி, மாணவர்களைத் தாண்டி குழந்தைகளையும் நோக்கி பாய்ந்துகொண்டிருக்கிறது. சமூகம் பயந்துகொண்டிருக்கிறது.
சாலைகளில் விபத்தினால் பாதிப்பு ஏற்படுவதற்கு ஹெல்மெட் மட்டுமே காரணமாக இல்லையென்றாலும், ஹெல்மெட் அதிகக் காரணமாக இருப்பதால் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கட்டாயப்படுத்தியிருக்கிறது. அதை மகக்ள் விரும்பி அணியும் நிலை வர வேண்டும். தலையைக் காக்க வேண்டும் என விரும்ப வேண்டும்.
அதேநேரத்தில், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் அந்த பாதுகாப்பை பெற்றுக்கொள்ள அரசு ஆவன செய்ய வேண்டும். பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. உடனே அத்தனை பிரச்சினைகளையும் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் இன்று விபத்துக்கும், சமூக அவலங்களுக்கும் காரணமாக இருக்கும் மதுவை ஒழிக்காமல் இந்தக் குற்றங்களை ஒழிக்க முடியாது. அதனால் எவ்வளவு விரைவாக மது ஒழிக்கப்படுவது இன்று அவசியமாகிப் போகிறது.
தமிழகத்தில் உள்ள அத்தனை டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். பூரண மதுவிலக்கோடு தமிழக விளங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஜூலை 10-ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழகம் முழுவதும் ஒரேநேரத்தில் அத்தனை மாவட்டங்களிலும், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பாஜக தொண்டர்களோடு, சமூக ஆர்வலர்களும், திரளாக பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டுகிறேன். அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் வரை பாரதிய ஜனதா கட்சியின் போராட்டம் தொடரும்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.