திமுக செல்வாக்கு இனிமேல் எடுபடாது: வானதி சீனிவாசன்
சென்னை
திமுக செல்வாக்கு இனிமேல் எடுபடாது என, தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில், இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு வானதி சீனிவாசன் இன்று அளித்த பேட்டியில், "கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றன. அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைந்தும், திமுக அந்த வெற்றியைப் பெற்றது, தமிழக மக்கள் அனைவரும் அவர்கள் பக்கம் நிற்பதாக தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். கடந்த தேர்தலில் பொய் வாக்குறுதிகள், பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்ததற்காக தக்க பதிலை மக்கள் திமுகவுக்குக் கொடுத்திருக்கின்றனர்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதே, திமுகவின் செல்வாக்கு இனி எடுபடாது எனத் தெரிந்துவிட்டது. இந்த இடைத்தேர்தலில் அது நிரூபணம் ஆகியுள்ளது. திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை உணர்த்தியிருக்கின்றனர். மக்களவைத் தேர்தலில் மக்களின் முடிவு தற்காலிகமானது என்று எண்ணும் வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
ஹரியாணாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காதது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், முற்றிலுமாக பாஜகவை புறந்தள்ளவில்லை. மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்கின்றனர்".
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
