தமிழகம், புதுவையில் மிதமான மழை; சில மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுவையில் மிதமான மழை; சில மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

சென்னை

வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி வடக்கு ஆந்திரப் பகுதி நோக்கி நகர்ந்ததால் தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவல்:

''நேற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வடக்கு ஆந்திரப் பகுதியில் நிலவுகிறது. நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது அடுத்து வரும் 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், அதனைத் தொடர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான அதிகபட்ச மழையாக கடலூர் மாவட்டம் கீழ சிலுவையில் 15 செ.மீ. பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்கள் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த மூன்று தினங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடலூர் மாவட்டம் கீழ சேர்வை 15 செ.மீ., பாம்பன் விரகனூர், மதுரை மாவட்டத்தில் 11 செ.மீ., ராமேஸ்வரம் 10 செ.மீ., லால்குடி, வல்லம், தங்கச்சிமடம் பகுதிகளில் 9 செ.மீ., செய்யாறு, செங்கல்பட்டு, சமயபுரம், பூண்டி, தொழுதூர், வாடிப்பட்டி, காவேரிப்பாக்கம் பெரிய அணைக்கட்டு பகுதிகளில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது''.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in