

இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜாவுக்கும் சுப.வீரபாண்டியனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் இருவர் குறித்து சிறுமுகையில் காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அப்போதிலிருந்தே ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து மோதல் நடந்து கொண்டிருக்கிறது.
இன்று (அக்டோபர் 24) வெளியான விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக- காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் இன்றும் ஹெச்.ராஜா மற்றும் சுப.வீரபாண்டியன் இருவருக்கும் இடையே கருத்து மோதல் உருவானது.
ட்விட்டர் மோதல் அப்படியே:
ஹெச்.ராஜா: சிறுமுகை யில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்
சுப.வீரபாண்டியன்: இப்போது சிறுமுகை, காரப்பன் கடையில் விற்பனை கூடியுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. ஆன்லைன் விற்பனையும் தொடங்கத் திட்டம் உள்ளதாம். ஹெச். ராஜாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. யாரும் எதிர்பார்த்திராத வகையில், சிறுமுகை காரப்பன் கடைக்கான ஆதரவு பெருகி, முகநூல், ட்விட்டர் அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகிறது. அடடே, மெர்சல் படம் தொடங்கி, காரப்பன் வரை ஹெச்.ராஜா "தொட்டதெல்லாம் துலங்குகிறது"
ஹெச்.ராஜா: காரப்பன் சில்க்ஸில் வியாபாரம் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று சன் தொலைக்காட்சி மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கூறியுள்ளனர். ஆகவே இந்த ஆண்டு அந்த நிறுவனம் பலமடங்கு வருமான வரி செலுத்த வேண்டும். அவர்கள் வியாபாரத்தைக் கணக்கில் கொண்டு வந்துள்ளனரா என்று வருமான வரித்துறை உடனே சர்வே நடத்த வேண்டுகிறேன்
(சுப.வீரபாண்டியனின் ட்வீட்டை மேற்கொளிட்டு) ஹெச்.ராஜா: ஆனால் ஸ்டாலின் தொட்டது துலங்க மாட்டேங்குதே. இன்று திமுக நிலைமை மல்லாக்க படுத்த காரப்பன் sorry கரப்பான் மாதிரி ஆயிடுச்சே.
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து:
ஹெச்.ராஜா: திராவிட இயக்கங்கள் இந்தி மொழி மீதும், சமஸ்கிருத மொழி மீதும் தம் இயக்கத்தவர்கள் மனதில் மொழி காழ்ப்புணர்வை வளர்த்தன. சாதிக் காழ்ப்புணர்வை வளர்த்தன. நாத்திகம் என்ற போர்வையில் இந்து மதத்தின் மீதும் காழ்ப்புணர்வை வளர்த்தன. தமிழக இடைத்தேர்தலில் பகவத் கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்குத் தமிழக வாக்காளர்கள் மரண அடி. இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்குத் தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.
சுப.வீரபாண்டியன்: அப்படியானால், வெற்றி வாய்ப்பை இழந்த இருவரும் இஸ்லாமியர்களா? அடடா. இந்தக் கொசுத் தொல்லையைத் தாங்க முடியவில்லையே. (ஹெச்.ராஜாவின் ட்வீட்டை மேற்கொளிட்டு கூறியிருப்பது)