Published : 24 Oct 2019 02:51 PM
Last Updated : 24 Oct 2019 02:51 PM

ஆளுங்கட்சியின் வெற்றி வழங்கப்பட்டது அல்ல; பல உத்திகளால் பெறப்பட்டது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை

ஆளுங்கட்சியின் வெற்றி வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (அக்.24) வெளியிட்ட அறிக்கையில், "நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிற தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உருவாகி வருகிறது.

பொதுவாக, இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சமநிலைத் தன்மை இல்லாத நிலை இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகார பலம், பணபலம் கூடுதலாகவே இருக்கிறது. இதை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாத நிலையில்தான் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெற்று விடுகிறது. இத்தகைய வெற்றிகள் மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் கருத முடியாது. இடைத்தேர்தல்கள் எப்படி நடத்தப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

எனவே, இடைத்தேர்தல்களில் ஏன் வெற்றி பெறவில்லை என்பதை காங்கிரஸ் கட்சியினரும், தமிழக மக்களும் புரிந்து கொள்வார்கள். 2016 நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் 17,315 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019 மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் 34,710 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு மிக சாதகமான சூழல் அமைந்திருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அமோக ஆதரவுடன் வெற்றி பெறுவார் என அனைவருடைய எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் ஆளுங்கட்சியின் வெற்றி என்பது வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்பதைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

கடுமையான சூழலில் ஆளுங்கட்சியை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு துணிவுடன் முன்வந்து வேட்பாளராக போட்டியிட்ட ரூபி மனோகரனைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் தொண்டர்களும், கூட்டணிக் கட்சியினரும் இமைப்பொழுதும் சோராதிருந்து கடுமையாக உழைத்தனர். அதேபோன்று, காங்கிரஸ் வேட்பாளருக்கு மிகக் கடுமையாக உழைத்த திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றி," என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x