திமுக பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து தேர்தலைச் சந்தித்ததால் தோற்றது: முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

திமுக பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து தேர்தலைச் சந்தித்ததால் தோற்றது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வரும் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்திருக்கின்றனர். வாக்காளர்களுக்கு நன்றி. வெற்றிக்காக உழைத்த துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி.

கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினும், அக்கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் திட்டமிட்டு பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். பொய்யான வாக்குறுதிகளை வாரி இறைத்தனர். அதனை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்ததன் மூலம் வெற்றி பெற்றனர். இப்போது மக்களுக்கு உண்மை புரிந்துவிட்டது. அதனால் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளும் ஏற்கெனவே திமுக மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வென்ற தொகுதிகள். இப்போது அத்தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி.

கடந்த மக்களவைத் தேர்தலில் மக்களிடம் நாங்கள் உண்மையைச் சொன்னோம். அப்போது அவர்கள் நம்பவில்லை. திமுக இந்த இடைத்தேர்தலை 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்றது. அந்த முன்னோட்டத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இது 2021-ம் ஆண்டிலும் தொடரும்.

தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பதற்கு இந்தத் தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது. நம்மால் எதனைச் செய்ய முடியுமோ அவற்றைத்தான் மக்களிடத்தில் சொல்ல வேண்டும். திமுக பொய்யை மட்டும் மூலதனமாக வைத்து தேர்தலைச் சந்தித்தது. அதனால் தோற்றது".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதையடுத்து, முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என எழுந்துள்ள புகார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்படும்" என முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in