திமுக- காங்கிரஸ் எழ முடியாத அளவுக்கு மக்கள் மரண அடியைக் கொடுத்துள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார்: கோப்புப்படம்
ஜெயக்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (அக்.24) எண்ணப்பட்டு வருகின்றன. காலை முதலே இரு தொகுதிகளிலும் அதிமுக வேப்டாளர்களே முன்னிலை வகித்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

"அதிமுக அரசின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் தொடுத்த குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடியாக்கி, முதல்வர் பழனிசாமி தமிழகத்தை நல்வழிப்படுத்துவதற்காக மக்கள் கொடுத்த நற்சான்று இது. இந்தத் தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெற்ற ஒரு போட்டி. இதில் தர்மம் வென்றிருக்கிறது. அதர்மம் தோற்றிருக்கிறது.

பாண்டவர் படைக்கு முன்னால் கவுரவப் படை ஓடி ஒளிந்திருக்கிறது. இந்த நிலைதான் நாளையும் தொடரும். இந்த வெற்றியுடன், உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதனைச் சந்திப்போம். அதுமட்டுமல்லாமல் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.

இந்த வெற்றியைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. அதிமுக தலைமையிலான கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி இது.

திருமங்கலம் ஃபார்முலாவை அனைத்துத் தேர்தல்களிலும் திமுக கையாண்டது. பிள்ளைகளுக்கு சாக்லேட்டுகள் கொடுத்து ஏமாற்றுவது போல பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து கடந்த மக்களவை தேர்தலில் திமுக வென்றது. இதனை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

இந்த பணநாயகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் உண்டான போட்டியில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. திமுக, காங்கிரஸ் பணத்தை மட்டுமே நம்பியிருந்தன. அவர்கள் எழ முடியாத அளவுக்கு மக்கள் மரண அடியைக் கொடுத்திருக்கின்றனர். ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது".

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in