Published : 22 May 2014 10:30 AM
Last Updated : 22 May 2014 10:30 AM

ஆர்.உமாநாத் மறைவு: தலைவர்கள் இரங்கல்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான ஆர்.உமாநாத்தின் மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தொழிற் சங்கவாதியுமான ஆர்.உமாநாத் (வயது 93), உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை காலை 7.15க்கு அவர் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மு.கருணாநிதி

முற்போக்கு எண்ணம் கொண்ட அனைவரது இதயங்களிலும் நீங்கா இடம் பெற்றவர் ஆர்.உமாநாத். உமாநாத்தும் அவரது அன்புத் துணைவியார், மறைந்த பாப்பா உமாநாத்தும் பேரவையில் ஆற்றிய உரைகள் மறக்கக் கூடியவை அல்ல. அவர்கள் இருவரும் இணைந்து தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக பாடுபட்டார்கள். அவர்களை இழந்து வாடுபவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

ஜி.ராமகிருஷ்ணன்

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக தன்னுடைய பணியைத் துவங்கி சிஐடியு தொழிற்சங்கத்தின் அகில இந்திய தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர் ஆர்.உமாநாத். அவரது மறைவு இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

வைகோ

கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் இனிமையாகப் பழகும் பண்பு நலம் கொண்டு இருந்தார் உமாநாத். அவரது மறைவு, பொதுஉடைமை இயக்கத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பேரிழப்பு.

தொல்.திருமாவளவன்

தமிழகமெங்கும் பயணம் செய்து போராட்டக்களங்களில் முன்னின்று உழைக்கும் மக்களுக்கு உத்வேகம் ஊட்டியவர். இந்திய நாடு அடிப்படைவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் இந்தச் சூழலில், உமாநாத் கட்டிக் காப்பாற்றிய உழைக்கும் மக்களின் ஒற்றுமையை முன்னெடுப்பதே அவருக்கு நாம் செய்யும் சரியான அஞ்சலி.

கி.வீரமணி

பொது வாழ்க்கையில் பண்பட்ட ஒரு பொதுவுடைமை வாதியைத் தமிழ்நாடு இழந்து விட்டது. உமாநாத்தும், அவரது வாழ்விணையர் பாப்பா உமாநாத்தும் தந்தை பெரியாரிடத்தில் மிகவும் அன்பு பாராட்டியவர்கள்.

அ.சவுந்திரராசன் (சிஐடியு தலைவர்)

உமாநாத் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இரண்டு வாரம், மூன்று வாரம், நான்கு வாரம் என்று அவர் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தினார். உயிர்போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கு பெற்று தந்ததில் தோழர். உமாநாத்தின் பங்கு மகத்தானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x