Published : 24 Oct 2019 10:12 AM
Last Updated : 24 Oct 2019 10:12 AM

இடைத்தேர்தல்களில் புதுச்சேரியில் தொடரும் ஆளுங்கட்சியின் ஆதிக்கம்: 9 தேர்தல்களில் 8 முறை வென்ற சூழல்

புதுச்சேரி

இடைத்தேர்தல்களில் புதுச்சேரியில் தொடர்ந்து ஆளுங்கட்சிகளே வெற்றி பெற்று தங்களின் ஆதிக்கத்தை நிரூபித்து வருகின்றன. இதுவரை புதுச்சேரியில் நடைபெற்ற 9 இடைத்தேர்தல்களில் 8 முறை ஆளுங்கட்சியே வென்றுள்ளது.

காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட வழக்கமாக இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் பல காரணங்களால் அதிகரிப்பது வழக்கம். ஆனால் புதுச்சேரியில் இடைத்தேர்தலில் கடந்த 2016 தேர்தலை விட 7 சதவீதம் வரை சரிந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் பதிவான வாக்குகளை விட இம்முறை குறைவாகவே பதிவானது.

இதனால் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அதிர்ச்சியில் ஆழ்ந்தன. யாருக்கு சாதகம் என பலரும் பலவித கோணங்களில் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கினர்.

இதுவரை புதுச்சேரியில் 9 முறை இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. அதிலும் தற்போதைய 2016 காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற இக்காலக்கட்டத்தில்தான் அதிக அளவில் அதாவது 3 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1972-ல் நடைபெற்ற முதல் இடைத்தேர்தலில் மட்டுமே எதிர்க்கட்சி வென்றுள்ளது. அதன்பிறகு நடந்த 8 இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வென்றுள்ளது. கடந்த 1972-ல் அரியாங்குப்பம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த புருஷோத்தமன் வென்றார்.

அதையடுத்து 1987-ல் பாகூரில் நடைபெற்ற இடைதேர்தலில் காங்கிரஸைச் சேர்ந்த ராஜலிங்கமும், 1998-ல் ஊசுடு தொகுதியில் தமாகா ஏழுமலையும், 1999-ல் புஸ்சி தொகுதியில் திமுக அனிபால் கென்னடியும், 2000-ல் ஏனாமில் காங்கிரஸைச் சேர்ந்த சண்முகமும், 2011-ல் இந்திரா நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தமிழ்ச்செல்வனும், 2016-ல் நெல்லித்தோப்பில் நாராயணசாமியும், 2019-ல் தட்டாஞ்சாவடியில் திமுக வெங்கடேசனும் வென்றனர்.

தற்போது காமராஜர் நகர் இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் ஜான்குமார் வென்றுள்ளார்.

இடைத்தேர்தலில் தொடர்ந்து ஆளுங்கட்சிகளும், அவர்களின் கூட்டணியுமே வென்று வருகின்றனர். கடந்த 2016-க்குப் பிறகு புதுச்சேரியில் நடந்த 3 இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான திமுகவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x