Last Updated : 24 Oct, 2019 09:39 AM

 

Published : 24 Oct 2019 09:39 AM
Last Updated : 24 Oct 2019 09:39 AM

பறவைகளுக்காக வெடி வெடிக்காத கிராம மக்கள்: இனிப்பு வழங்கி பாராட்டிய சிவகங்கை ஆட்சியர்

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக தீபாவளி அன்று வெடி, வெடிக்காத கிராமமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இனிப்பு வழங்கி பாராட்டினார்.

திருப்பத்தூர் அருகேயுள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இனப்பெருக்கத்திற்காக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. வெடி சத்தத்தால் அப்பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் சரணலாயம் அமைந்துள்ள வேட்டங்குடி, கொள்ளுக்குடிபட்டி கிராமமக்கள் 40 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையில் வெடி வெடிப்பதில்லை.

அதேபோல் அவர்கள் கோயில் விழாக்கள், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளிலும் வெடி வெடிப்பதில்லை. பறவைகளுக்காக தங்களது சந்தோஷத்தை விட்டு கொடுத்த கிராமமக்களின் தியாகத்தை பாராட்டி வனத்துறை சார்பில் நேற்று இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கிராமமக்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினார். மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன், வனச்சரக அலுவலர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் சாலை வசதி, பறவைகள் சரணாலயப் பூங்கா, கண்மாய் பகுதிகளை சீரமைக்கக் வலியுறுத்தி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x