

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச் செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் கௌதமன் உட்பட 12 பேர் போட்டியிட்டனர்.
விக்கிரவாண்டியில் 84.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் 93 ஆயிரத்து 633 ஆண், 95 ஆயிரத்து 22 பெண், 3-ம் பாலினத்தவர் 4 பேர் உட்பட 1 லட்சத்து 88 ஆயிரத்து 659 பேர் வாக்களித்துள்ளனர்.
வாக்குப் பதிவு முடிந்ததும், விக்கிரவாண்டி தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான இ.எஸ். பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன.
வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ண 2 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தலா 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து வருகிறார்.