

2016-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக பலர் தொண்டாற்றி வருகின்றனர். இவர்களின் அரிய தொண்டினை கருத்தில் கொண்டு, தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி வருகிறது.
அவ்வகையில் 2016-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2 வது தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தங்களைப் பற்றிய முழு விவரங்களை இணைத்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.