Published : 24 Oct 2019 07:56 AM
Last Updated : 24 Oct 2019 07:56 AM

காது கேட்காமல், வாய் பேச முடியாமல் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் ‘பரவை’ முனியம்மா

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

‘தூள்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற மதுரை ‘பரவை’ முனியம்மா, தற்போது வாயும் பேச முடியாமல், காதும் கேட்காதநிலையில் மரணப்படுக்கையில் உயிருக்குப்போராடி வருகிறார்.

‘நட்சத்திரங்கள்’ வானில் இருக்கிற வரைக்கும்தான் அதற்கு மவுசும், மதிப்பும் இருக்கும், கீழே விழுந்தால் அதற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும் என்பார்கள். அதுபோலதான் திரைநட்சத்திரங்கள் வாழ்க்கையும் அமைந்துவிடுகிறது.

அதற்கு தற்போதைய உதாரணம் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது பெற்ற மதுரை நாட்டுப்புறப்பாடகி ‘பரவை’ முனியம்மாள். விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தில் நடித்த ‘சிங்கம்போல நடந்துவாரான் செல்லப் பேராண்டி, ’ என்ற பாடலை தனது கணீர் குரலில் கம்பீரமாக பாடிய ‘பரவை’ முனியம்மா, தமிழ் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்தார்.தொடர்ந்து 84 படங்களில் நடித்து தமிழ் திரையுலகத்தின் பிஸியான துணை நடிகையாகவும் இருந்தார். கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் மதுரை பரவையில் தனது மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்து வந்தார். 85 வயதான

‘பரவை’ முனியம்மாவுக்கு ஒரு கட்டத்தில் வயது முதிர்வால் உடல்நலகுறைவு ஏற்பட்டு வீட்டிலே முடங்கினார். இதை அறிந்த மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘பரவை’ முனியம்மாவை நேரில் அழைத்து அவருக்கு ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கி மாதந்தோறும் ரூ. ஆயிரம் வட்டியாக வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால், அவருக்கான வைத்திய செலவுக்கு அந்த பணமும் தற்போது போதுமானதாக இல்லை. கடந்த வாரம், அவரது உறவினர்கள், மகள்கள் மற்றும் மகன்கள் உதவியால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகிவிட்டதால் தற்போது மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் வீட்டிலே படுத்தப்படுக்கையாக உயிருக்குப்போராடி வருகிறார். அவர் பாடிய ‘சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி, ’ என்ற பாடல் வரிகளை போல் கம்பீரமாக இருந்த ‘பரவை’ முனியம்மா தற்போது உடல் மெலிந்து கண் பார்வை மங்கி, வாய் பேச முடியாமல், காதும் கேட்காமல் படுக்கையிலே அனைத்தும் கழித்து வருகிறார். அவரை அவரது மகள்கள் வள்ளி, ராக்கு உடனிருந்து கவனிக்கிறார்கள்.

அவரது மகள் வள்ளியிடம் பேசினோம்.

‘‘படவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தபோது அம்மாவுக்கு ஒரே ஆறுதல் எங்க அப்பா

வெள்ளைச்சாமி சேர்வைதான். அவர் இறந்துபிறகே அம்மாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது. கடந்த வாரம் மதுரை காளவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். மருத்துவர்கள், கிட்னி பழுதடைந்துவிட்டது.

இதயத்திலும், நுரையீரலிலும் நீர் கட்டி விட்டது என்றார்கள். மருத்துவ செலவுக்கு காசு இல்லாமல் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம். ஆகாரம் எதுவும் அம்மாவால் சாப்பிட முடியவில்லை. தண்ணீர் ஆகாரம்தான் கொடுக்கிறோம்.

தினமும் பக்கத்து ஊர் மருத்துவரை அழைத்து வந்து நரம்பு ஊசி வந்து போடுகிறோம். போடாவிட்டால் இரவு அம்மாவால் தூங்க முடியாது. மருத்துவமனையிலும், வீட்டிலும் அம்மா படும் கஷ்டத்தை கண் கொண்டு சசிக்க முடியல. நடிகர் சிவகார்த்திக்கேயன் மட்டும்தான் அம்மாவை நேரில் வந்து பார்த்து கை செலவுக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்து சென்றார். மற்ற யாரும் வரல. ராதாரவி சாரும், சரத்குமார் சாரும்தான் ஜெயலலிதாவிடம் அழைத்து சென்றாங்க. அவங்க இல்லாட்டி இந்த 6 ஆயிரம் ரூபாயும் வராது. மற்ற யாரும்எட்டிக்கூட பார்க்க வரல. அம்மா கூட பிறந்தவங்க யாரும் இல்லை. அம்மாவுக்கு நாங்க 3 மகள்கள், 3 மகன்கள் இருக்கோம். அப்பாவுக்கு சரியான தொழில் இல்லாததால் அம்மாதான் எங்க பேரையும் தன்னுடைய சுயசம்பாத்தியத்தால் வளர்த்தாங்க. நாங்க சின்ன பசங்களாக இருக்கும்போது அம்மா கோயில் திருவிழாக்களுக்கு கும்மிப்பாட்டு பாடுவதற்குகாக போவாங்க. அப்படியே நாட்டுப்புறப்பாட்டு பாடினாங்க.

ஒரு முறை ரேடியாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகுதான் ‘தூள்’ பட வாய்ப்பு கிடைத்தது. சினிமாவிலும் அம்மா பெருசா சம்பாதிக்கவில்லை. அம்மா நடிச்ச படங்களுக்கு கிடைத்த வருமானத்தின் பெரும்பகுதியை அவரது மானேஜர் எடுத்துக் கொண்டார். சம்பாதித்தபோது தனக்கென்று எதுவும் சேர்த்து வைக்கவில்லை. ’’ என்றார்.

மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவித்தொகை கிடைக்குமா?

பரவை முனியம்மாவுக்கு 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். மாற்றுத்திறனாளி மகன் செந்தில்குமாரை தவிர, மற்றவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

மூத்த மகனின் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டார். அவர் அவரது குழந்தைகளை வளர்க்கவே மிகுந்த சிரமப்படுகிறார். இரண்டாவது மகன் பால் பண்ணையில் வேலைப்பார்க்கிறார். அவருக்கும் பெரிய வருமானம் இல்லை. மூன்றுமகள்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்த குடும்பமும் வறுமையின் பின்னணியில் உள்ளதால் மருத்துவம் பார்க்க வசதியில்லாமல் வீட்டிலே மரணத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். ‘பரவை’ முனியம்மாவால் பேச முடியாவிட்டாலும், இந்த மரணப்போராட்டத்திலும் தனக்கு பிறகு கடைசி மாற்றுத்திறனாளி மகன் என்ன ஆவாரோ என்று ஏக்கமும், கவலையும் அவரது கண்களில் தெரிகிறது. அவரது மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தார்களாம். இதுவரை கிடைக்கவில்லையாம். அவருக்கு உதவித்தொகை கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரவை முனியம்மா குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x