

தென்காசி
தென்காசியிலுள்ள பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நடைபெற்ற சிறப்புப் பூஜைகளிலும், திருக்கொடியேற்றத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் அதனைத் தொடர்ந்து மண்டகப்படி பூஜைகள் நடைபெற்றன.
இதுபோல் தினமும் இரவு சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு புறப்பட்ட உலகம்மன் திருத்தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வலம்வந்து 10.15 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோயில் ஆய்வாளர் கலாமணி ஆகியோர் செய்திருந்தனர்.