Published : 23 Oct 2019 03:36 PM
Last Updated : 23 Oct 2019 03:36 PM

அரசு ஊழியர்களுக்கு மட்டும் போனஸ் அறிவிப்பு: போராட்டக் களமான புதுச்சேரி

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

புதுச்சேரி

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 908 கிடைக்கும். அதேநேரத்தில் அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும், கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படவில்லை. இன்னும் தீபாவளிக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அவர்கள் தரப்பில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் நடந்துள்ளதால் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள சூழலில் தேர்தல் நிறைவடைந்த சூழலில் போனஸ் தொடர்பான அரசு உத்தரவு நேற்று வெளியானது.

புதுச்சேரி அரசுத்துறைகளில் பணிபுரியும் பி பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து சி-பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக அதிகபட்சமாக ரூ.6,908 வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ.1,184 வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களைப் போல் தங்களுக்கும் போனஸ் கிடைக்குமா? நிறுவன, கூட்டுறவு ஊழியர்கள் ஏக்கம்

தீபாவளிக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களும், கூட்டுறவு நிறுவன ஊழியர்களும் தங்களுக்கு எப்போது போனஸ் அறிவிக்கப்படும் என்று காத்துள்ளனர்.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "உற்பத்தி சார்ந்த அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் தொகை குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டவுடன், அது குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது," என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று (அக்.23) புதுச்சேரி போராட்டக் களமாக மாறத் தொடங்கியது.

இந்நிலையில் தீபாவளி நெருங்கிவிட்டதால் போனஸ் மற்றும் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி இன்று ஏஐடியூசி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பாசிக் ஊழியர்கள் அரசு மருத்துவமனை எதிரில் ஒன்று கூடினர். அப்போது போலீஸார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர்.

மீறி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம், பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் ரமேஷ், உள்ளிட்ட 35 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தபோது செல்ல மறுத்து காவலர் சமுதாய நலக்கூடத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமப்புற செவிலியர்கள் 2-ம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

புதுச்சேரி நலவழித்துறையில் பணிபுரியும் கிராமப்புற செவிலியர்கள், பெண் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கடந்த ஒரு வருட காலமாக தாமதமாக ஊதியம் வழங்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், செப்டம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்தும், கடந்த ஆண்டு போனஸ் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்தும் நேற்று முதல் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இன்று அவர்கள் இரண்டாம் நாளாகப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

தவிப்பில் துப்புரவுத் தொழிலாளர்கள்

புதுவையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் ஸ்வச்சதா கார்ப்பரேஷனின் ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு இம்மாத சம்பளம் இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை. நிர்வாகத் தரப்பில் விசாரித்தால் அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். அத்துடன் தீபாவளிக்கான போனஸ் தரப்படாத சூழல் உள்ளதாகக் கூறுகின்றனர்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x