பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம்: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (அக்.23) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய அரசு, மனித சமூகத்தைப் பிளவுபடுத்தும் மனுதர்ம சிந்தனையின் நவீன வடிவமாகும். இதன் மூலம் பெரும் பகுதி மக்களின் கல்வி உரிமையினைப் பறித்து விட மத்திய அரசு முயல்கிறது. மத்திய அரசின் பிற்போக்குத்தனமான சிந்தனையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கெனவே 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 என பல கட்டங்களில் பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் அடித்தட்டு, உழைக்கும் மக்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

கல்வியின் தரத்தையும், திறனையும் உயர்த்திட நீட் போன்ற தேர்வுகள் பயனளிக்கவில்லை என்பதை அனுபவம் உணர்த்தியுள்ளது. நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி பயிற்சி மையங்கள் புற்றீசல்களாகப் பெருகி, லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்க மட்டுமே பயன்படுகிறது. இது மத்திய அரசு அனுமதித்துள்ள சட்டப்பூர்வ கொள்ளையாகும்.

தற்போது உள்ள நிலையில் ஆரம்பக் கல்வியில் சேருவோரில் 75 சதவீதம் பேர் உயர் கல்விக்கு வர இயலாத நிலை தொடர்கிறது. இதனை மாற்றி, பெரும் பகுதியினர் உயர் கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்தும் வழிவகை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

நீட் தேர்வு உட்பட அனைத்து வகையான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in