

சேலம்
மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால், மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 25,000 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 119.330 அடியை எட்டியது. இந்நிலையில், மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக இன்று (அக்.23) காலை 6.15 மணிக்கு முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணையில் இருந்து விநாடிக்கு 27,000 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக, காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.