Published : 23 Oct 2019 11:15 AM
Last Updated : 23 Oct 2019 11:15 AM

கொலைக்குற்றங்களில் தமிழகத்துக்கு 6-வது இடம்; சென்னைக்கு 4-வது இடம்: பாதுகாப்பற்ற நிலையில் மக்கள் - ஸ்டாலின் கண்டனம்

சென்னை

தமிழகத்தில் நடைபெறும் கொலைகள் குறித்து சட்டப்பேரவையில் தவறான தகவல் தந்ததற்காக முதல்வர் பபழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (அக்.23) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த பச்சைப் பொய்ப் பிரச்சாரத்தின் ஈரம் காய்வதற்குள், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், "இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று, இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் 6-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது" என்றும், "நாட்டில் உள்ள 19 மாநகரங்களில் 162 கொலைகள் நடைபெற்று, கொலைகள் நடந்த மாநகரங்களின் பட்டியலில் 4-வது மாநகரமாக சென்னை உள்ளது" என்றும் வெளிவந்திருப்பதன் மூலம், அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுக் கிடப்பது, தமிழகப் பொதுமக்களுக்கு ஆதாரபூர்வமாகத் தெரிய வந்திருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்; 2016-ல் 1511 கொலைகளும், 2017-ல் 1466 கொலைகளும், 2018-ல் 1488 கொலைகளும் நடந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று வருடங்களில் மட்டும் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 4465 ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில், 2017-ல் 1466 கொலைகள் மட்டுமே நடைபெற்றன என்று கூறி விட்டு, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கு, அதே வருடத்தில் 1613 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததிலிருந்து - தமிழக சட்டப்பேரவையிலேயே முதல்வர் உண்மையை மறைத்து, தவறான தகவலைத் தந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

ஆளுங்கட்சியினரின் சொல்படி, காவல்துறையில், 'டிரான்ஸ்பர் அண்ட் போஸ்டிங்குகள், 'ஒவ்வொரு வழக்கிலும் அதிமுகவினரின் தலையீடு', 'காவல் நிலையங்கள் எல்லாம் அந்தந்தப் பகுதியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவது' என்று, ஒரு முறையற்ற ஆட்சியை முதல்வர் நடத்திக் கொண்டிருப்பதால், இன்றைக்கு கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலத்தின் முதல்வர் என்ற ஐஎஸ்ஐ முத்திரையை பழனிசாமி பெற்றிருக்கிறார்.

காவல்துறை சீர்திருத்தங்கள், காவலர் நலன் குறித்து திமுக ஆட்சியில் மூன்று போலீஸ் கமிஷன்கள், எவ்விதச் சிபாரிசும் இன்றி அமைக்கப்பட்டன. ஆனால் அதிமுக ஆட்சியில், ஒரு போலீஸ் கமிஷனை அமைப்பதற்கே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டது.

காவல் துறையினருக்கு போதிய வாகன வசதி இல்லை - இருக்கின்ற வாகனங்களும் காலாவதியானவை என்ற நிலையில் புலனாய்வுப் பணிகளிலோ, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான எவ்வித முயற்சிகளிலோ; கழக ஆட்சியில் 'ஸ்காட்லாண்ட் யார்டுக்கு' இணையாக திறமையாக இருந்த தமிழகக் காவல்துறையால் ஈடுபட முடியவில்லை.

'பிரகாஷ் சிங்' வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியான காவல் துறை சீர்திருத்தம், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் படு தோல்வியடைந்து, 'வாக்கி டாக்கி ஊழல்', 'ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கே டெண்டர் கொடுக்கும் ஊழல்', 'பணி ஓய்வுக்குப் பிறகும் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டவர்கள்', 'குட்கா ஊழலில் ஒரு டிஜிபி வீடே சிபிஐ ரெய்டுக்குள்ளானது' என்று, தமிழ்நாடு காவல்துறை, வரலாறு காணாத கடும் சுனாமியில் சிக்கி விட்டது.

பொதுமக்களுக்கு சட்டத்தின் ஆட்சியை வழங்க முடியாமல், அதிமுக ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் கூட தத்தளித்து நிற்கிறார்கள் என்பது வேதனையானது.

இதன் விளைவாக கூலிப் படைகளின் அட்டகாசம் தலைதூக்கி, எங்கு பார்த்தாலும் கொத்துக் கொத்தாகக் கொலைகள் என்ற பயங்கரமான நிலை தமிழகத்தில் நிலவி, இன்றைக்கு இந்தியாவிலேயே ஆறாவது கொலை மாநிலம் என்ற அவப்பெயரை மாநிலத்திற்கு அதிமுக ஆட்சி தேடித் தந்திருக்கிறது.

கொலையில் மட்டுமல்ல, இந்தியத் தண்டனைச் சட்டப்படியான குற்றங்களிலும் இந்தியாவிலேயே 6-வது மாநிலம்; 'சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்' அடிப்படையிலான குற்றங்களில் இந்தியாவில் தமிழகம் 4-வது மாநிலம்; சட்டவிரோதமாக கூடியதாகப் போடப்பட்ட வழக்குகளிலும், கலவரங்களிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம் என்பது, அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல - அழிக்க முடியாத கறையாகும்.

பட்டியல் மற்றும் பழங்குடியினர் கொலையில் 4-வது மாநிலமாகவும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வன்முறையில் ஏழாவது இடத்திலும் தமிழகம் உள்ளது எனும் தகவல் அம்மக்களுக்கும் இம்மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் 8-வது இடத்திற்குள் தமிழ்நாடு உள்ளது. இந்தத் தோல்விகளுக்காக மட்டுமாவது, போலீஸ் துறையை தன் நேரடிப் பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆகவே, பொய்த் தோற்றத்தை உருவாக்கி - அதை ஊரெல்லாம் ஊர்வலம் விடலாம் என்று நினைக்கும் முதல்வர் பழனிசாமி, இப்போதாவது தனது ஆட்சிக்கு, கொலை போன்ற கொடிய குற்றங்களைத் தடுக்கக் கூடிய ஆற்றல் துளியும் இல்லை என்பதை உணர வேண்டும்.

மேலும், சட்டப்பேரவைக்கே தவறான தகவல் தந்ததற்காக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இந்தக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைக்குப் பிறகாவது, அதிமுக அமைச்சர்களின் தலையீடு இன்றி - முதல்வர் அலுவலகத்தின் அரசியல் உத்தரவுகளுக்கு அடிபணியாமல், தமிழகக் காவல் துறை சுதந்திரமாகச் செயல்படுவதற்கு முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொலைக்குற்றங்களின் அச்சத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x