

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அணையில் 2-வது மற்றும் 7-வது மதகுகளில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. ரப்பர் சீல்கள் விரிவாக்கத்தால் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமானதுதான் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 309 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று 572 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 42.10 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து பாசனக் கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 463 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் உள்ள 8 பிரதான மதகுகளில் முதல் மதகில் கடந்த 2017 நவம்பர்ில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த மதகு மாற்றப்பட்டு, ரூ.3 கோடி மதிப்பில் புதிய மதகு அமைக்கப்பட்டது. முதல் மதகினை தவிர, மற்ற 7 மதகுகள் மாற்றப்படாத நிலையில், அணையில் 42 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்படுவதில்லை.
இந்நிலையில் அணையில் உள்ள 2-வது மற்றும் 7-வது மதகுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 7 மதகுகளையும் மாற்றியமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், 2 மற்றும் 7-வது மதகுகளில் உள்ள ரப்பர் சீல்கள் விரிவாக்கம் காரணமாக நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. ரப்பர் சீலின் மூலம் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமானதுதான். இதற்காக அச்சப்பட தேவையில்லை. அணையின் மதகுகளை மாற்றியமைக்க ஒப்பந்தம் விடும் பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். வெளியேற்றப்படும் தண்ணீரை, ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.