

திண்டுக்கல் / தேனி
தேனி மாவட்டத்துக்கு நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான மழைகூட பெய்யாமல் பல இடங்களில் வெயில் கொளுத்தியது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் சிற்றாறுகளில் நீர் பெருக்கெடுத்து உள்ளது. மூலவைகையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. போடி, சோத்துப்பாறை அணை நிரம்பியது. நேற்று முன்தினம் மஞ்சளாறு அணை 51 அடியை நெருங்கியதைத் தொடர்ந்து, முதல் அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு நேர்மாறான பருவநிலையே மாவட்டத்தில் நிலவியது.
காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குமுளி, ராசிங்காபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி சோத்துப்பாறையில் 12 மி.மீ. தேக்கடியில் 10.2 மி.மீ. மழை பெய்தது. பெரியார் அணையில் 6 மி.மீ., உத்தமபாளையம்- 2 மி.மீ., ஆண்டிபட்டி 3.8 மிமீ மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த இடத்திலும் சாரல்கூட பெய்யாமல் ஏமாற்றியது. கொடைக்கானல் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. கொடைக்கானலுக்கு பலத்த மழையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. மக்கள் வராததால் பிரையண்ட் பூங்கா, ஏரிப் பகுதிகள் வெறிச்சோடின.