தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி தீவிரம்
Updated on
1 min read

வண்டலூர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூருக்கு அருகில் கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த தீபாவளி பண்டிகையின்போது, தற்காலிக பேருந்து நிலையத்தில், பயணிகள் பாதுகாப்புக்கென ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் இருக்கைகள், நிழற்குடை, மக்கள் தொடர்பு மையம், குடிநீர், விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டன. அதேபோல் இந்த முறையும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து பணிகளும் நாளை முடிவடையும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் பேருந்துக்கு முன்பதிவு செய்ய வசதியாக கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தவல்லியில் கணினி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்களின் வழியாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்று அங்கிருந்து பேருந்துகளில் ஏறிக் கொள்ளலாம். இதற்காக மாநகர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

சாலையோர விளக்குகள்

பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரை ஜி.எஸ்.டி., சாலையில், பெரும்பாலான சாலை விளக்குகள் சேதமடைந்துள்ளன. இதனால், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய பகுதிகளில், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைய இருக்கும் நிலையில், பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சேதமடைந்த சாலை விளக்குகளையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in