Published : 23 Oct 2019 08:34 AM
Last Updated : 23 Oct 2019 08:34 AM

சீன பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை: சுங்கத் துறை எச்சரிக்கை

சீனாவில் இருந்து பட்டாசுகளை சட்ட விரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சென்னை சுங்கத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்நாட்டில் இருந்து பட்டாசுகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்தாலோ, பதுக்கி வைத்தாலோ, விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெடிமருந்து சட்டம், 2008-க்கு எதிரான வெடிமருந்துகளை சீன பட்டாசு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பவை. அவை சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அத்துடன், உள்நாட்டு பட்டாசு தொழிலுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது.

எனவே, சீன பட்டாசுகளை வாங்கி பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும், யாராவது சீன பட்டாசுகளை விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருந்தாலோ அதுகுறித்து சுங்கத்துறை அலுவலகத்துக்கு 044-25246800 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x