

சென்னை
உடல் நலப்பாதிப்பால் அவதிப்பட்ட பசுமாட்டின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி, பசுவை காப்பாற்றிய மருத்துவகுழுவினரை முதல்வர் எடப்பாடி பழனி சாமி நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவர் ஆறு வருடங்கள் நிரம்பிய தன்னுடைய பசுமாடு, தீவனம் உட்கொள்வதிலும், சாணம் மற்றும் சிறுநீர் கழிப்பதிலும் சிரமப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, பசுவை அருகில் இருந்த கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றார். அவரது பரிந்துரையின்படி, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் கடந்த 15-ம் தேதி அன்று பசுவை மேல் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பசுமாட்டிற்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், பசுவின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக், பொருட்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பொருட்டு, கால்நடை மருத்துவக் கல்லூரியின் அறுவைச் சிகிச்சை பிரிவிற்கு பசு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த 18-ம் தேதி அன்று காலை 11:00 மணிக்கு லாபரோடமி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில், பசுவின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.
அகற்றப்பட்ட 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்களில் உணவு மற்றும் பாலுக்கு உபயோகிக்கும் பிளாஸ்டிக் காகிதங்கள் மற்றும் அலுமினியப் படலம் இருந்தது. அத்துடன் ஊசி, ஊக்கு, ஆணி, திருகாணி, நாணயம் உட்பட பல ஆபத்தான பொருட்களும் அகற்றப்பட்டன. சிகிச்சைக்குப் பின் தற்போது பசு தண்ணீர் அருந்தி, சாணம் மற்றும் சிறுநீர் கழித்து நல்ல உடல் நலத்துடன் உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சையியல் துறை இயக்குநர் முனைவர் சி. பாலசுப்பிரமணியன் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பசுவின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிளாஸ்டிக் பயன்பாட்டால், மண்ணிற்கு மட்டுமல்ல, வாய் பேச இயலாத உயிரினங்களுக்கும் எந்த அளவு ஆபத்து ஏற்படுகிறது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.
வாய் பேச முடியாத உயிரினங்களின் முக்கியத்துவத்தை கருதியும், எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் விதமாகவும், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்ததுடன் அதற்கான மாற்று பொருட்களையும் அறிவித்தது.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கால்நடை மருத்துவத் துறையின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், கால்நடை வளர்ப்பு குறித்து தகுந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, கால்நடைகளை இது போன்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டினார்.
அப்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபால், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பா.டென்சிங் ஞானராஜ் மற்றும் பசுவின் உரிமையாளர் முனிரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.