

சென்னை
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (அக்.22) வெளியிட்ட அறிக்கையில், "மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெயின் அளவு குறைக்கப்படும் என்றும், அதற்கு ஈடாக இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு தீர்மானம் எடுத்துள்ளது. மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் சுமார் 60 ஆண்டுகளாக நல்லுறவு இருக்கிறது. மலேசியாவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 3-வது இடமாக இந்தியர்கள் இருக்கிறார்கள்.
சுமார் 20 லட்சத்துக்கும் மேலான இந்தியர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள். அங்கு வாழ்கின்ற தமிழர்களைத்தான் இந்தியர்கள் என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு மலேசியாவில் அதிகமான தமிழர்கள் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் ரப்பர் தோட்டங்களிலும் பாமாயில் தோட்டங்களிலும் வேலை செய்து வருகிறார்கள். மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாமாயில் எண்ணெயை கணிசமான அளவுக்குக் குறைத்துவிட்டால், அங்கு வேலை செய்யும் தமிழர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும்.
தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற சுமார் 5 லட்சம் தமிழர்களும் உணவு விடுதிகளிலும் தொழில் நுட்பத்துறையிலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சம்பாதிக்கும் தொகையில் 90 சதவீதத்தை தமிழ்நாட்டிலுள்ள அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்புகிறார்கள். மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அந்நிய செலவாணி வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் யோசிக்காமல் மத்திய அரசு திடீரென்று பாமாயிலின் இறக்குமதி அளவை குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யத் தீர்மானம் போட்டிருப்பது, இந்திய அரசு காஷ்மீரின் தனித்துவ அதிகாரத்தை ரத்து செய்ததை மலேசியா கண்டித்ததற்கு பழிவாங்கத்தான் இறக்குமதியைக் குறைத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.
பிரதமர் மோடிக்கு மலேசியா, இந்தியா உறவு பற்றி அவ்வளவாக புரியாது. காரணம் மலேசியாவிலிருக்கும் இந்தியர்கள் எல்லாம் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதி பேர் கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தைச் சேர்ந்த தென்னிந்தியர்கள்தான்.
ஆதலால், வட இந்திய மனோபாவம் கொண்ட பிரதமர் மோடி குறுகிய நோக்கத்தில் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது," என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.