Published : 22 Oct 2019 01:12 PM
Last Updated : 22 Oct 2019 01:12 PM

மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

மருத்துவர்களுக்கு அளித்திட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (அக்.22) வெளியிட்ட அறிக்கையில், "அரசு மருத்துவர்கள் வரும் அக்டோபர் 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பல உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மழை காலங்களில் நோய்களால் மக்கள் பாதிக்கப்படும் பொழுது அரசு மருத்துவமனைகளையே மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு இதனை விட்டால், அவர்களுக்கு வேறு வழியில்லை.

இத்தகைய நிலையில் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். மருத்துவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தை தொடராமல் ஒத்தி வைத்தனர்.

அமைச்சர் அளித்திட்ட வாக்குறுதிப்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் மீண்டும் போராட்டக் களத்திற்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாது அமைச்சர் அளித்திட்டபடி வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

அதற்கு மாறாக போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அச்சுறுத்துவது பயன் அளிக்காது என்பதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x