

சகோதரி நகரங்கள் திட்டத்துக்காக புதிய துறை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அமெரிக்காவில் உள்ள சான் அண்டோனியோ நகரத்துடன் 2008-ம் ஆண்டிலும், டென்வர் நகரத்துடன் 1984-ம் ஆண்டிலும், ரஷ்யாவில் உள்ள வோல்கோகார்ட் நகரத்துடன் 1966- ம் ஆண்டிலும் சகோதரி நகரங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளது. கடந்த மே மாதம் பிரதமர் மோடியின் சீன பயணத்தின்போது சாங்கிங் நகரத்துடன் சென்னை மாநகராட்சி சகோதரி ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் இரு நகரங்களுக்கும் இடையே கல்வி, நகர கட்டமைப்பு, நீர் மற்றும் குப்பை மேலாண்மைக்கான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். கலாச்சார, பொருளாதார உறவுகளை மேம்படுத்த இவை உதவும் என்பதால் இந்த ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.
எனினும், சென்னை மாநகராட்சிக்கு சகோதரி நகரங்கள் ஒப்பந்தங்களின் மூலம் குறிப்பிட்டு சொல்லும்படியான வளர்ச்சி ஏதும் இல்லை. கடந்த ஆண்டு சான் அண்டானியோ நகரத்திலிருந்து வந்திருந்த கூடைப்பந்து வீரர்கள் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுடன் கூடைப்பந்து விளையாடினர். இது போன்று பெயரளவில் சில முயற்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் உள்ள ஆள் பற்றாக்குறையும், வெளிநாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கு பிரத்யேக குழு இல்லாததும் இந்த ஒப்பந்தங்கள் வெற்றி பெறாதததற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே, சகோதரி நகரங்கள் திட்டங்களை கையாள்வதற்கென தனி துறையை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வெளிநாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கும், அவர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்வதற்கும் ஒரு குழுவை அமைக்க வேண்டும். எனவே வெளிநாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கென மாநகராட்சியில் தனித் துறையை அமைப்பதற்கு அரசிடம் அனுமதி கேட்கவுள்ளோம்”என்றார்.