Published : 22 Oct 2019 11:21 AM
Last Updated : 22 Oct 2019 11:21 AM

கேள்விகள் தொடர்ந்து கேட்பவர்கள் விஞ்ஞானி ஆகலாம்: கோவையில் நடைபெற்ற அறிவியல் திருவிழாவில் மூத்த விஞ்ஞானி சி.வசந்தராஜ் அறிவுரை

கோவை

ஏன், எதற்கு, எப்படி, எதனாலே என்றெல்லாம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருப்பவர்கள் விஞ்ஞானி ஆகலாம் என்று மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன முன்னாள் விஞ்ஞானியும், குமரகுரு தொழிலக ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு மைய இயக்குநருமான சி.வசந்தராஜ் கூறினார்.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி (விஐடி) சார்பில் ‘நாளைய விஞ்ஞானி’ என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திருவிழாவை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தின. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, அவரவர் பகுதியில் நிலவும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை, பல்வேறு அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்.

இவ்வாறு மாணவர்கள் தயாரித்த ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் கோவை மண்டல அறிவியல் திருவிழா கோவை எஸ்.எஸ்.வி.எம். ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட் டங்களில் உள்ள பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 120-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். இதில் 25 சிறந்த ஆய்வுகள், நவம்பர் மாதம் வேலூர் விஐடி வளாகத்தில் நடைபெற உள்ள மாநில அறிவியல் திருவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்டன.

அறிவியல் ஆய்வில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி மூத்த விஞ்ஞானி சி.வசந்தராஜ் பேசியதாவது:

மாணவர்களிடையே உள்ள விஞ்ஞான அறிவை யும், படைப்புத் திறமையையும் வெளிக்கொணரும் வகையில் இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ள `இந்து தமிழ் திசை' நாளிதழ், விஐடி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கு பாராட்டுகள். பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் அப்துல் கலாமுடன் பணியாற்றியபோது, நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அதேபோல, கலாம் நிறைய கேள்விகளைக் கேட்பார். எனவே, விஞ்ஞானியாக விரும்பும் மாணவர்கள், தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஏன், எதற்கு, எப்போது, எதனால் என்றெல்லாம் கேள்வி கேட்பவர்கள் விஞ்ஞானி ஆகலாம்.

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். விடாமுயற்சியும், கடின உழைப்பும் வெற்றியைத் தேடித் தரும். விஞ்ஞானிகளுக்கு பல்வேறு துறை களிலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. கணிதம், வேதியியல், இயற்பியல் என அடிப்படைப் பாடங்களை நன்கு கற்றுக் கொள்ளுங்கள். பாடங்களைப் படிப்பதுடன், நிறைய செயல்முறைப் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இவை உங்களை விஞ்ஞானியாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய கண்டுபிடிப்புகள் அவசியம்

`இந்து தமிழ் திசை' ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, "மக்களின் பிரச்சினைகளை, துயரங் களைத் தீர்க்கவும், நாட்டின் வளர்ச்சிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் உதவும். கிராமப்புற மாணவர்கள், தங்களது வாழ்வியல் அனுபவங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள். நகர்ப்புற மாணவர்கள் வாழ்வை மேம்படுத்தும் கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள். இவ்விரண் டுமே சமுதாயத்துக்கு அவசியம்.

அதேசமயம், புதிய கண்டுபிடிப்புகள் ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்பட வேண்டும். அழிவுக்காக பயன்படக்கூடாது.

`நாளைய விஞ்ஞானி' நிகழ்ச்சியில் மாணவர்கள் சமர்ப்பித்த புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை, சமூகப் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லும் பணியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், விஐடி-யுடன் `இந்து தமிழ் திசை'யும் ஈடுபடும்" என்றார்.

பேராசிரியர் என்.மணி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில முன்னாள் தலைவரும், ஈரோடு கலைக் கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவருமான பேராசிரியர் என்.மணி பேசும்போது, "சமூக நலன் சார்ந்த பணிகளில் விஐடி-யின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. அதேபோல, நாளிதழ் தொடங் கப்பட்டது முதல், 140 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் தேவைகளை அறிந்து, செய்திகளைத் தருகிறது `தி இந்து' நாளிதழ். அதேபோல, `இந்து தமிழ் திசை' நாளிதழும் எப்போதும் சமூக நலன் சார்ந்தே இயங்குகிறது" என்றார்.

பேராசிரியர் டாக்டர் அனு பைசல்

விஐடி பல்கலைக்கழக முதுநிலை உதவிப் பேராசிரியர் டாக்டர் அனு பைசல் பேசும்போது, "போட்டியில் பங்கேற்கும் அனைவருமே வெற்றியாளர்கள்தான். `நாளைய விஞ்ஞானி' போன்ற அறிவியல் திருவிழாக்கள், போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், சிறந்த அர்ப்பணிப்புடன் போட்டியில் பங்கேற்க வேண்டும். கடின உழைப்பு நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும். எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் பெற்றோரையும், ஆசிரியர்களையும் மறந்துவிடக் கூடாது" என்றார்.

கல்வி முறையில் மாற்றம் தேவை

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலர் எஸ்.சுப்பிரமணி பேசும்போது, "மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெறும் தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை. அனைத்து மாணவர்களையும் சென்றடையும் வகையில் பாடம் நடத்துவது அவசியம்" என்றார்.

விழாவில், விஐடி சாஃப்ட் ஸ்கில்ஸ் துறை உதவி மேலாளர் ஷர்மிஸ்தா சிங், எஸ்.எஸ்.வி.எம். குழும அறங்காவலர் எஸ்.மோகன்தாஸ் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில் மெகபுன்னிசா, ரிஷி சரவணன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அறிவியல் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

‘நாளைய விஞ்ஞானி’ நிகழ்வின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.ராமமூர்த்தி வரவேற்றார். `இந்து தமிழ் திசை' நாளிதழ் சென்னை பதிப்பு தலைமை செய்தியாளர் வி.தேவதாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கோவை மண்டல முதுநிலை மேலாளர் (விநியோகம்) ப.விஜயகுமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x