Published : 22 Oct 2019 09:42 AM
Last Updated : 22 Oct 2019 09:42 AM

சேத்தியாத்தோப்பு அருகே இயற்கை முறையில் கத்தரி விவசாயம்: அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயி

சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூரில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட கத்தரி வயலில் காய்களை பறிக்கும் விவசாயி.

க.ரமேஷ்

கடலூர்

சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் இயற்கை முறையில் கத்தரி விவசாயம் செய்து அதில் அதிக லாபம் ஈட்டி வருகிறார்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வெய்யலூர் கிராமம். வீராணம் ஏரியிலிருந்து பாசனம் பெறுகிறது. இக்கிராமத்தில் நெல், பன்னீர் கரும்பு ஆகியவை விளைவிக்கப்படுகிறது. நெல், கரும்பில் போதுமான வருமானம் இல்லாத நிலையில் விவசாயிகள் சிலர் மாற்றுப் பயிர்களை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் ராஜேந்திரன் என்ற விவசாயி தனது வயலில் இயற்கையான முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளார்.

இதுதொடர்பாக விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், “இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்ற கத்தரி என்றவுடன் கிராமத்திலேயே பலரும் விரும்பி வந்து வாங்கிச் செல்கின்றனர். காய்கறி கடைகளுக்கும் சென்று கொடுப்பதால் உடனடியாக பணமும் கிடைக்கிறது.

ஆரம்பத்தில் நெல், கரும்பு பயிர் செய்து வந்தேன். போதிய வருமானம் இல்லை. மாற்றுப்பயிர் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. முயற்சித்து பார்க்கலாம் என்று யோசித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் ஆலோனை கேட்டேன். வேளாண்துறை அதிகாரிகள் எளிதில் விற்பனையாக கூடிய சாமந்திப் பூவை சாகுபடி செய்ய பரிந்துரைத்தனர். அவர்கள் கூறியபடியே மாட்டுச் சாணம் மட்டும் பயன்படுத்தி சாமந்திப்பூ சாகுபடி செய்தேன். ஓரளவுக்கு லாபமும் கிடைத்தது.

இதுபோல் காய்கறிகளை பயிர் செய்யலாமே என்று நினைத்து ஓசூரிலிருந்து கத்தரி கன்றுகளை வரவழைத்து 12 சென்டில் பயிரிட்டேன். கத்தரி செடிகளுக்கு வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை உரமான சாணத்தை மட்டும் பயன்படுத்தினேன். கத்தரி செடிகள் நன்றாக வளர்ந்து செழித்து காய்க்கவும் ஆரம்பித்தன. நானும், எனது மனைவியும் கத்தரி காய்களை பறித்து கடைகள் மற்றும் வியாபாரிகளிடம் கொடுத்து வருகிறோம். வாரத்திற்கு இருமுறை காய் பறிக்கிறோம். வாரத்திற்கு 250 கிலோ காய் கிடைக்கிறது. அனைத்து செலவுகளும் போக வாரத்திற்கு ரூ.5 ஆயிரம் கிடைக்கிறது. வருடத்துக்கு ரூ.2.50 லட்சம் வரை கிடைக்கிறது. அடுத்த ஆண்டில் இருந்து கத்தரி பயிர் செய்யும் நிலத்தை அதிகப்படுத்த உள்ளேன்” என்றார்.

ராஜேந்திரன் மனைவி ஜெயசித்ரா கூறுகையில், “இதன்மூலம் கிடைக்கும் வருமானம் குடும்ப செலவினங்களுக்கு பெரிதும் உதவுகிறது. வெளியில் வாங்கியிருக்கிற கடன்களை எளிதாகவும் அடைக்க முடிகிறது. என்னைப்போல் பெண்கள் இதுபோன்று காய்கறிகளை தங்களது சின்ன இடத்தில் கூட பயிர் செய்ய ஆரம்பித்தால் கவலைகள் இல்லாமல் வாழ முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x